'ராயுடு' எனும் நிகழ மறுத்த அற்புதம்.. CSK-வின் அழகிய ஆக்ரோஷ பொக்கிஷம் - MI கட்டப்பா CSK பாகுபலியானது எப்படி?

x

ஐபிஎல் போட்டிகளில் இருந்து சென்னை வீரர் அம்பத்தி ராயுடு ஓய்வு பெற்றுள்ளார்... அம்பத்தி ராயுடுவின் ஐபிஎல் பயணத்தை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...

அம்பத்தி ராயுடு.... வலுவான மிடில் ஆர்டர் பேட்டர்... களத்தில் நிலைத்து நின்றுவிட்டால் ஸ்கோர் போர்டை தாறுமாறாக எகிற வைக்கும் வல்லமை படைத்தவர்... கிரீஸைவிட்டு இறங்கி வந்து இவர் பறக்கவிடும் சிக்சர்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு...

ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் அடையாளங்களில் ஒருவராகப் பார்க்கப்படும் ராயுடு அறிமுகமானது என்னவோ மும்பை அணியில் தான்...

2010ம் ஆண்டு மும்பை அணியில் தனது பயணத்தை தொடங்கிய ராயுடு, நிலையான மிடில் ஆர்டர் பேட்டராக மட்டுமின்றி, டீசன்ட்டான விக்கெட் கீப்பராகவும் திகழ்ந்தார். சுமார் 7 ஆண்டுகள் அதே அணியில் ஆடி, 3 முறை மும்பை சாம்பியன் பட்டம் வெல்வதற்கும் துணை நின்றார் ராயுடு...

2011ம் ஆண்டு கொல்கத்தா உடனான லீக் போட்டியில் கடைசி பந்தில் சிக்சர் அடித்து மும்பையை அவர் வெற்றி பெற வைத்ததும், 2017 இறுதிப்போட்டியின் கடைசி ஓவரில் அவர் பிடித்த கேட்ச்சும் மும்பை ரசிகர்களால் மறக்க முடியாது.

2018ம் ஆண்டு ஐபிஎல் தொடர் ராயுடு கேரியரில் பொற்காலம்... சென்னை அணி அவரை புதிய பரிமாணத்தில் ரசிகர்களிடம் பிரதிபலித்தது. ராயுடுவை அமரேந்திர பாகுபலியாக ரசிகர்கள் கொண்டாட, ஓபனராகவும் களமிறங்கி கலக்கினார் ராயுடு... அந்த சீசனில் 600க்கும் அதிகமான ரன்கள் அடித்த ராயுடு, பீனிக்ஸ் பறவைபோல் உயிர்த்தெழுந்து சென்னை அணி சாம்பியன் பட்டம் வெல்ல அடிநாதமாகத் திகழ்ந்தார்.

சர்வதேச கிரிக்கெட்டில் ராயுடு பெரிதாக ஜொலிக்காவிட்டாலும், ஐபிஎல்-ல் அவரின் பங்களிப்பு கணிசமானது.

200க்கும் அதிகமான ஐபிஎல் போட்டிகள்... 4 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்கள்... இரு பரம போட்டியாளர்களின் அணிகளிலும் இடம்பெற்று சாம்பியன் பட்டம்... என ஐபிஎல்-ல் தவிர்க்க முடியாதவர் ராயுடு...

தற்போது எண்ணிலடங்கா நினைவுகளை விட்டுச் சென்றபடி, தனது ஐபிஎல் பயணத்தை முடித்துக்கொண்டு உள்ளார் ராயுடு... ஓய்வு பெற்றாலும் என்றென்றும் சென்னை, மும்பை ரசிகர்களின் மனதில் இருந்து அகல மாட்டார் அம்பத்தி ராயுடு...


Next Story

மேலும் செய்திகள்