"தாக்குதல் நடத்தியவர்கள் குழந்தைகள்.. அவர்கள் மீது கோபம் இல்லை" - ராகுல் காந்தி
தனது வயநாடு அலுவலகத்தை தாக்கியவர்கள் மீது எந்த கோபமும் இல்லை எனவும், அவர்கள் குழந்தைகள் எனவும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள ராகுல் காந்தியின் அலுவலகத்தை, கடந்த மாதம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் பிரிவை சேர்ந்தவர்கள் தாக்கி சேதப்படுத்தினர். இந்தநிலையில் கேரளாவிற்கு வருகை தந்துள்ள ராகுல் காந்தி தாக்குதலுக்கு உள்ளான தனது அலுவலகத்தை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது அலுவலகம் தாக்கப்பட்டது துரதிருஷ்டவசமானது எனவும், வன்முறை எப்போது பிரச்சனைகளை தீர்க்காது எனவும் கூறினார். தாக்குதல் நடத்தியவர்கள் மீது தனக்கு கோபமோ, விரோதமோ இல்லை எனவும் தெரிவித்த ராகுல் காந்தி, தாக்குதல் நடத்தியவர்கள் குழந்தைகள் எனவும் குறிப்பிட்டார். ராகுல் காந்தி தனது பேட்டியின்போது, தனது அலுவலகத்தை தாக்கியவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டை சேர்ந்தவர்கள் என்றோ, அக்கட்சியின் மாணவர் அணியினர் என்றோ குறிப்பிடாதது கவனிக்கத்தக்கது. பேட்டிக்கு பின்னர் ராகுல் காந்தி, தனது தொகுதியில் மாபெரும் பேரணியை தலைமை தாங்கி நடத்தினார்.