தங்கக்காசு தருவதாகக் கூறி மோசடி - அதிரடி காட்டும் அமலாக்கத்துறை
ஹாங்காங் நாட்டை அடிப்படையாக கொண்டு செயல்படும் கியூ நெட் நிறுவனமானது, விகான் டைரக்ட் செல்லிங் என்ற நிறுவனம் மூலமாக இந்தியாவில் பொதுமக்களிடம் முதலீட்டை ஈர்த்தது. முதலீடு செய்தவர்களுக்கு தங்கக் காசு வழங்கப்படும் என பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தது. Multi level marketing எனப்படும் எம்.எல்.எம் முறைப்படி, நாடு முழுவதும் 5 லட்சம் பேரிடம் பணத்தை வசூல் செய்து, இந்த நிறுவனம் மோசடியில் ஈடுபட்டதாக புகார்கள் குவிந்தன.
கடந்த 2008 ஆம் ஆண்டு, தமிழகத்தில் மட்டும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்து, ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஏமாந்ததாக தெரியவந்தது. இந்த விவகாரம் தொடர்பாக மும்பை, சைபராபாத் மற்றும் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரமாக நடைபெற்று வந்தன.
சென்னையில் சேத்துப்பட்டு போலீசார் முதற்கட்டமாக வழக்குப் பதிவு செய்த நிலையில் , பின்பு வழக்கின் தன்மை காரணமாக, சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. பின்னர் இதில் தொடர்புடைய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த மோசடியில் தொடர்புடைய விகான் டைரக்ட் செல்லிங் நிறுவனத்தின் நிர்வாகி மைக்கேல் பாரேரா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே, கடந்த 2014 ஆம் ஆண்டு, இந்த வழக்கை கையில் எடுத்த அமலாக்கத் துறையினர், விசாரணையை தீவிரப்படுத்தினர். விசாரணையின் இடையே, கடந்த 2017 ஆம் ஆண்டு, முதற்கட்டமாக 150 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறையினர் முடக்கினர்.
இதன் தொடர்ச்சியாக, தற்போது மீண்டும் வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள அமலாக்கத் துறை, சென்னை, பெங்களூர், மும்பை உள்ளிட்ட பல்வேறு இடங்களில், விகான் டைரக்ட் செல்லிங் நிறுவனத்தில் நேரடியாக தொடர்புடைய பங்குதாரர்கள் மற்றும் நிர்வாகிகள் வீட்டில், அதிரடியாக சோதனை நடத்தியது.
அந்த அடிப்படையில், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பெண் தொழிலதிபர் பத்மா வீராசாமி வீட்டில், 2 நாட்கள் சோதனை நடைபெற்றது. பெண் தொழிலதிபர் பத்மா கடந்த 2008 ஆம் ஆண்டு சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டு, அவருடைய 190 கோடி ரூபாய் அளவிலான சொத்துக்கள் முடக்கப்பட்டன. தற்போது நடந்த சோதனையில், பல்வேறு முக்கிய ஆவணங்கள், வங்கிக் கணக்குகள் மற்றும் விகான் டைரக்ட் செல்லிங் நிறுவன தொடர்புடைய நபர்கள் உள்ளிட்டோரின் 36 வங்கிக் கணக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
இந்த 36 வங்கி கணக்குகளில், சுமார் 90 கோடி ரூபாய்க்கு மேல் பணத்தை அமலாக்க துறையினர் முடக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் விசாரணையில் போலி நிறுவனங்கள் மூலமாக சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் வரை, விகான் டைரக்ட் செல்லிங் நிறுவனம் மோசடியில் செய்திருப்பதும், அமலாக்கத் துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது.