அடியோடு புறக்கணித்த புதின்.. ரஷ்யாவின் புதிய கொடூர சட்டம் - மொத்த உலகமும் அதிர்ச்சியில்..!

x

ரஷ்யாவில் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு தடை விதிக்கும் மசோதா ஓரினச் சேர்க்கையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் நடப்பது என்ன?.. பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்..

இயற்கைக்கு மாறாக, ஆணாக இருப்பவர் பெண்ணாகவும், பெண்ணாக இருப்பவர் ஆணாகவும், அறுவை சிகிச்சை மற்றும் ஹார்மோன் மருந்துகள் மூலம், மாற்றம் செய்து மாறி வருவது உலக அளவில் பரவலாக அதிகரித்துள்ளது.

கலாச்சார பண்பாடுகளை காரணம் காட்டும் 60க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த வகை உறவுகளை கடுமையாக எதிர்த்து வருகின்றன. அந்த வகையில் ரஷ்யாவும் lgbtq அங்கீகரிக்க மறுத்து வருகிறது.

இந்நிலையில், ரஷியாவில், ஒரு மனிதனின் பாலினத்தை மாற்றும் அனைத்து மருத்துவ சிகிச்சைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த மசோதாவிற்கு ரஷ்ய நாடாளுமன்றத்தின் கீழ்சபை ஒப்புதல் அளித்தது. இதனை தொடர்ந்து அந்த மசோதா மேல்சபைக்கு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டு அதன் பின் அதிபர் புதின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விரைவில் சட்ட வடிவம் பெற உள்ளது.

தொடர்ந்து ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வரும் புதின், ஓரினச் சேர்க்கை யாளர்கள் மற்றும் லெஸ்பியன் சமூகத்திற்கு எதிராக கடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில், ரஷ்யாவில் கடந்த 2020ல் ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்ய தடை விதிக்கப்பட்டது. தற்போது பாலின மாற்று அறுவை சிகிச்சை மற்றும் அதற்கான ஹார்மோன் சிகிச்சைகள் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும், பிறக்கும் போதே குறைபாடுடன் பிறந்த குழந்தைகளுக்கு அத்தகைய சிறப்பு சிகிச்சைகளை மேற்கொள்ள விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம், அரசு அலுவலகங்களில் பாலின மாற்றம் செய்து கொண்டோரை அங்கீகரித்து, எந்தவொரு ஆவணங்களிலும் மாற்றம் செய்யக்கூடாது என்பதை இந்த மசோதா தெளிவுபடுத்துகிறது.

பாலின மாற்றம் செய்து கொண்டவர்கள் குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பதற்கும் இந்த மசோதாவில், தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல, அவர்களது திருமணம் சட்டப்படி செல்லாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"ஓரினச் சேர்க்கை மற்றும் லெஸ்பியன் உறவுகள் நாட்டின் "சீரழிவிற்கு" வழிவகுத்த நிலையில், இந்த புதிய மசோதா, ரஷ்ய மக்களையும் குழந்தைகளையும் பாதுகாப்பதற்கான சட்டமாக உள்ளது" என்று ரஷ்ய நாடாளுமன்ற தலைவர் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய அரசின் இந்த மசோதாவுக்கு, ஓரினச் சேர்க்கையாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்