"அந்த சாதிக்காரங்க உள்ள வரகூடாது"..சாமி ஆடி சொன்ன பெண் மீது நடவடிக்கை எடுக்க புதுகை கலெக்டர் உத்தரவு
மனிதக் கழிவை மனிதர்களே அள்ளும் அவலம் தொடர்வதில் அரசுகளை நீதிமன்றங்கள் சாட்டையால் அடிப்பது தொடர்கிறது... இப்போது இதில் மற்றொரு கோரமாக, பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டுள்ளது. மனித குலமே வெட்கி தலைக்குனியும் இந்த அவலம் அரங்கேறியிருப்பது சமத்துவம் பேசும் தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் கிராமத்தில்தான்...
தாகத்திற்கு குடிக்கும் நீரில் இத்தகையை இழிவான செயலை செய்ய இத்தனை குரூரமான எண்ணமா என எண்ண தோன்றுகிறது பட்டியலின மக்களின் கண்ணீர்... இவ்விவகாரம் தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிற, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே கிராமத்தில் ஆய்வை மேற்கொண்டனர்.
அப்போது இன்னும் பிற்போக்கான தீண்டாமை அங்கிருப்பது வெளிச்சமானது. கிராம டீ கடையில் இரட்டை குவளை பயன்படுத்தப்பட்டது, உள்ளூர் அய்யனார் கோவிலில் பட்டியலின மக்கள் செல்வதற்கு விதிக்கப்பட்ட தடை தெரியவந்தது. இதுகுறித்து பேசிய ஆட்சியர் கவிதா ராமு, பட்டியலின மக்களை கோவிலுக்கு அழைத்துச் சென்றார். அதற்கு எதிராக கோவிலில் சாமி ஆட தொடங்கிவிட்டார் சிங்கம்மாள்...
இறுதியாக பட்டியலின மக்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்து சென்றனர். மக்களின் குறைகளை கேட்ட கவிதா ராமு, குடிநீர் தொட்டியில் மலம் கலந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததுடன், கிராமத்தில் மூன்று பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்திற்கு வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார். வேதனையை பகிர்ந்த பட்டியலின மக்கள், மலம் கலந்தவர்களுக்கு கடும் தண்டனை வேண்டும் என வலியுறுத்தினர். இதனையடுத்து இரட்டை குவளை முறையை பயன்படுத்திய டீக்கடை உரிமையாளர் முக்கையா, அய்யனார் கோவிலில் சாமி ஆடிய சிங்கம்மாள் ஆகிய இருவரையும் வெள்ளனூர் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.