"மாமன்னன் படம் வெளியானால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும்" - திரைப்படக்குழு மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு
உதயநிதி நடித்த மாமன்னன் திரைப்படம் வருகின்ற 29ஆம் தேதி வெளியாக உள்ளது. இதற்கான இசை வெளியீட்டு விழா கடந்த ஜூன் ஒன்றாம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் இத்திரைப்படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவு படுத்தும் விதமாக கருத்து தெரிவித்ததாக புகார் எழுந்தது. இந்நிலையில் சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. அந்த புகார் மனுவில், மாமன்னன் திரைப்படத்தால் பொது அமைதிக்கும் சமூக நல்லிணக்கத்திற்கும் குந்தகம் ஏற்படும் என கூறப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சமுதாயத்திற்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் செயல்பட்ட காரணத்தால் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story