பல்கலைக்கழகங்களுக்கு ஒரே பாடத்திட்டம்..கொதித்தெழும் பேராசிரியர்கள்..காரணம்..?
தமிழ்நாட்டில் கலை அறிவியல் படிப்புகள் சார்ந்து, 13 பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன. இந்த பல்கலைக்கழகங்களில் வெவ்வேறு பாடத்திட்டங்கள் அமலில் இருந்து வந்த நிலையில், நடப்பு கல்வி ஆண்டு முதல் ஒரே பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கின்றன. தமிழ் மற்றும் ஆங்கில பாடங்கள் 100 விழுக்காடு அளவிற்கு பொதுவான பாடத்திட்டமாகவும், இதர பாடப்பிரிவுகளில் 75 விழுக்காடு பாடத்திட்டங்கள் பொதுவானதாகவும் அமைந் துள்ளது. இதில் மீதமுள்ள 25 விழுக்காடு பாடத்திட்டங்களை அந்தந்த பல்கலைக்கழகங்கள் அங்குள்ள சூழலுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.
இதன் மூலம் ஒரே பாடத்திட்டம், ஒரே நேரத்தில் தேர்வு நடைபெற்று, தேர்வு முடிவுகளும் ஒரே நேரத்தில் வெளியாகும் என்பதால் நடைமுறை எளிமையாகும் என கருதப்படுகிறது. மேலும் பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளில் உயர்கல்வித்துறை தீவிரம் காட்டி வருகிறது. ஆனால் இந்த பாடத்திட்டத்திற்கு பேராசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் கொந்தளித்துள்ளனர். இந்த பாடத்திட்டம் தேசிய கல்வி கொள்கை 2020க்கு மாற்றாக உள்ளதால் பல தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. இதற்கிடையில் இப்பாடத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பேராசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. கல்லூரி ஆசிரியர் கூட்டு நடவடிக்கை குழு என்றஅமைப்பு ஏற்படுத்தப்பட்டு, அதன் சார்பில் அனைத்து பல்கலைக்கழகங்கள் முன்வாகவும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் பேசிய பேராசிரியர்கள், பொதுப்பாடத்திட்டத்தால் பல்கலைக்கழகங்களின் தனித்தன்மை பாதிக்கப்படும் என குற்றஞ்சாட்டியுள்ளனர்.
காந்திராஜ், தலைவர், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்)--
மேலும் 2022 தேசிய தரவரிசைப் பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள் தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை தன்னாட்சி கல்வி நிறுவனங்கள். இதனால் பொதுப்பாடத்திட்டம் கொண்டு வருவது கல்வித்தரத்தை பாதிக்குமோ என்ற கோணத்திலும் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசி அமைச்சர் பொன்முடி , பொது பாடத்திட்டத்தை அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்றும் , இதில் யாருக்கும் எவ்வித பிரச்சனையும் ஏற்படாது என்றும், மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாகவும் விளக்கமளித்தார். பொது பாடத்திட்ட விவகாரம் நாளுக்கு நாள் சர்ச்சையை ஏற்படுத்தி வருவதோடு, பேராசிரியர்களின் போராட்டமும் தீவிரமடைந்து வருவதால் , இந்த விவகாரத்தில் முதலமைச்சர் தலையிட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.