வாக்குறுதிகளை அள்ளி வீசிய பிரியங்கா..நர்மதையில் பூஜை செய்து பிரியங்கா பிரசாரம்

x

பாஜக ஆட்சி செய்யும் மத்திய பிரதேசத்தில் இவ்வாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கவுள்ளது. கர்நாடகாவில் பெற்ற வெற்றி உற்சாகத்திலிருக்கும் காங்கிரஸ், மத்திய பிரதேசத்தை வசப்படுத்த காய் நகர்த்துகிறது. இதற்கான பணியில் தீவிரமாக இறங்கியிருக்கிறார் பிரியங்கா காந்தி.. கடந்த 2018 தேர்தலில் காங்கிரசுக்கு வெற்றி வசமானாலும் உட்கட்சி பூசலால் ஜோதிராதித்ய சிந்தியா தனது ஆதரவாளர்களுடன் விலக, காங்கிரஸ் ஆட்சி 2020-ல் கவிழ்ந்தது. இப்போது அதுபோன்ற சூழல் உருவாகிவிடக்கூடாது என பிரியங்கா மத்திய பிரதேசத்தில் அதிக கவனம் செலுத்துகிறார். நீண்ட காலம் ஆட்சியிலிருக்கும் பாஜக அரசுக்கு எதிரான அலையை வாக்காக மாற்ற தீவிரம் காட்டுகிறார். இதற்காக மத்திய பிரதேசத்தின் கலாச்சார நகரமான ஜபல்பூரில், நர்மதை ஆற்றில் சிறப்பு பூஜை செய்து பிரசாரத்தை தொடங்கியிருக்கிறார் பிரியங்கா காந்தி...பின்னர் அங்கு நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார் பிரியங்கா காந்தி மத்திய பாஜக ஆட்சியையும், மத்திய பிரதேச பாஜக ஆட்சியையும் கடுமையாக விமர்சனம் செய்தார். மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் அரசு செய்தது என்ன... என கேள்வியை எழுப்பிய பிரியங்கா காந்தி, 3 வருடங்களில் பாஜக அரசு வழங்கிய மொத்த வேலை 21, செய்த ஊழல்கள் 225 என சாடினார்.

காங்கிரஸ் அரசு கொடுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றும் எனக் கூறிய பிரியங்கா காந்தி, மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் ஆயிரத்து 500 ரூபாய் உதவித்தொகை வழங்குவோம் என்றார். வீட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரை 500 ரூபாய்க்கு கொடுப்போம் என அறிவித்தார். வீட்டுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும், 200 யூனிட் மின்சாரம் பாதி விலையில் வழங்கப்படும் என வாக்குறுதியளித்தார். மாநிலத்தில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்த பிரியங்கா காந்தி, பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டார். மாநிலத்தில் வெற்றியை குறிவைக்கும் காங்கிரஸ், பாஜகவை சமாளிக்க மென்மையான இந்துத்துவா கொள்கையை கையில் எடுத்திருப்பதாகவும் அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் தெரிவிக்கப்படுகிறது.மாநிலத்தில் 150 சீட்களுக்கு மேல் காங்கிரஸ் வெல்லும் என ராகுல் கணித்திருக்கும் சூழலில், இலக்கை எட்ட காங்கிரஸ் விரைந்து பிரசாரத்தை தொடங்கியிருப்பதால் மத்திய பிரதேசத் தில் தேர்தல் களம் களைக்கட்ட தொடங்கியிருக்கிறது


Next Story

மேலும் செய்திகள்