"காலாவதியான பொருட்கள் விற்பனை" தனியார் சூப்பர் மார்க்கெட் மீது குற்றச்சாட்டு
ஆரணியில் செயல்பட்டு வரும் தனியார் சூப்பர் மார்க்கெட்டில் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சேவூர் சாலையில் பிரபல தனியார் சூப்பர் மார்க்கெட் 3 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், ரிஷப் என்பவர் தனது வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கியுள்ளார். வீட்டிற்கு சென்று பார்த்த போது, அங்கு வாங்கிய தயிர் 4 நாட்களுக்கு காலாவதியாகி இருந்தது தெரியவந்தது. அது குறித்து சூப்பர் மார்க்கெட் ஊழியர்களிடம் கேட்டபோது அவர்கள் சரிவர பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் அளிக்க உள்ளதாக ரிஷப் தெரிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன் ஆரணியில் செயல்பட்டு வரும் ஹோட்டல் உணவில் புழு இருந்த நிலையில், தற்போது காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக எழுந்துள்ள புகார் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.