பணம் இல்லாததால் மூடப்படும் பிரைவேட் ஸ்கூல்..உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள்..திருப்பத்தூர் அருகே பரபரப்பு
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் பெத்தூர் பகுதியில், பிரபல தனியார் பள்ளி இயங்கி வந்தது. இந்தநிலையில் நிதி வசதி இல்லாததால் பள்ளியை மூடுவதாக, அதன் தாளாளர் அறிவித்துள்ளார். இந்தநிலையில், அப்பள்ளியில் இலவச கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பயின்று வரும் மாணவர்களின் பெற்றோர், தங்களது குழந்தைகளை வேறு பள்ளியில் சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறி, பள்ளி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். முதலில் தங்களது பிள்ளைகளை மாற்று பள்ளியில் சேர்க்க உதவுதாக கூறிய தாளாளர், தற்போது உதவ மறுப்பதாக குற்றஞ்சாட்டினர். பள்ளி தாளாளரோ, இந்த விவகாரத்தில் அரசு முடிவெடுக்கும் என தெரிவித்தார். இதனிடையே தகவலறிந்த மெட்ரிக் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் ஜெயகாந்தம், பெற்றோர்களிடம் பள்ளி இந்தாண்டு மூடப்படாது என உறுதியளித்தார். இதனையடுத்து பெற்றோர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.