"கழிவுநீர் தொட்டியில் மனிதர்கள் இறக்கினால் சிறை" - தேசிய பட்டியலினத்தோர் ஆணையம் எச்சரிக்கை
கழிவுநீர் தொட்டியில் மனிதர்களை இறக்கினால் சிறைத்தண்டனை வழங்கப்படும் என தேசிய பட்டியலினத்தோர் ஆணைய துணைத்தலைவர் அருண் ஹால்டர் எச்சரித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி மூன்று பேர் அண்மையில் உயிரிழந்தனர். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தேசிய பட்டியலினத்தோர் ஆணைய துணைத்தலைவர் அருண் ஹால்டர், இறந்தவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என உறுதி அளித்தார். இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் 72 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டதாக குறிப்பிட்ட அவர், கழிவுநீரை அகற்றுவதற்கு இயந்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். கழிவுநீர் தொட்டியில் மனிதர்களை இறக்கினால் சிறைத்தண்டனை வழங்கப்படும் என எச்சரித்த அவர், இதுகுறித்து அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.