பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால ஆட்சி- இந்தியாவின் நிலை...? ராணுவத்தில் நடந்த மாற்றங்கள் என்ன..?
பிரதமர் நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு கடந்த 9 ஆண்டுகளில் பாதுகாப்புத்துறையில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் ராணுவ தளவாடங்கள் உற்பத்தி வாரியம், ஏழு பொதுத் துறை நிறுவனங்களாக மாற்றியமைக்கப்பட்டு சீரமைக்கப்பட்டுள்ளது. ராணுவத் துறை ஆராய்ச்சிக்கான பட்ஜெட்டில் 25 சதவீதம் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கும், அது தொடர்பான ஆராய்ச்சி களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
2014-15ல் 1,941 கோடி ரூபாயாக இருந்த ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி, 2020-21ல் 8,434 கோடி ரூபாயாக, 334 சதவீதம் அதிகரித்துள்ளது. தற்போது 84 நாடுகளுக்கு, இந்தியாவில் இருந்து ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.தேசிய ராணுவ பயிற்சி நிறுவனத்தில் சேர பெண்களுக்கு முதல் முறையாக அனுமதியளிக்கப்பட்டது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் 557 பெண்கள் ராணுவ அதிகாரிகளாக பதவியேற்றுள்ளனர். ஐந்து பெண்கள் கர்னலாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்
2019 குடியரசு தின ராணுவ அணி வகுப்பில், கேப்டன் பாவனா கஸ்தூரி ராணுவ சேவைப் பிரிவை வழிநடத்தி சென்று வரலாறு படைத்தார். இந்திய விமானப் படையில், முதல் பெண் போர் விமானியாக நியமனம் பெற்று, கேப்டன் அபிலாஷா பாரக் சாதனை படைத்தார். சுதந்திர இந்திய வரலாற்றில், முதல் முறையாக முப்படை தளபதி பதவி உருவாக்கப்பட்டது. ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைகள் இடையே ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேம்படுத்த இது பெரிதும் உதவுகிறது.மத்திய கேபினட்டின் அங்கீகாரம் இல்லாமல், 2,000 கோடி ரூபாய் வரையிலான ராணுவ கொள்முதல்களுக்கு அனுமதி யளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கட்டப்பட்ட முதல் விமானந்தாங்கி கப்பலான ஐ.என்.எஸ் விக்ராந்த், 2022 செப்டம்பரில், தனது சேவையை தொடங்கியது. அதேபோல், 2015ல் நேபாளத்தில் ஏற்பட்ட வீரியம் மிகுந்த பூகம்பத்தின் போது, இந்திய விமானப் படை மூலம் பெரிய அளவில் நிவாரணப் பொருட்கள் அனுப்பட்டன. சுமார் 6000 பேர் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர். பிரதமர் மோடி தலைமையிலான அரசு தொடர்ந்து பாதுகாப்புத் துறை மீது கூடுதல் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத் தக்கது.