'ராதா - கிருஷ்ணன்' முதல் 'துர்க்கை' வரை - பிரதமரின் அசத்தல் பரிசுகள் - வியந்து பார்த்த உலக தலைவர்கள்
உலக தலைவர்களை சந்தித்தும் நிகழ்ச்சிகளில் இந்திய பாரம்பரியத்தை உலகறிய செய்யும் வகையில் விதவிதமான பரிசுப் பொருட்களை வழங்கி வருகிறார் பிரதமர் மோடி... ஜூன் மாதம் ஜி-7 நாடுகளின் மாநாட்டில் கலந்துக்கொண்ட உலக நாட்டு தலைவர்களுக்கு இந்தியாவில் பல மாநிலங்களில் தயாரிக்கப்படும், கைவினைப் பொருட்களை பரிசாக வழங்கி அசத்தினார். இப்போது பாலியில் ஜி-20 உச்சி மாநாடு நிறைவு நாளிலும் உலக நாட்டு தலைவர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கினார்.
ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானீசுக்கு பித்தோரா ஓவியத்தை பிரதமர் பரிசாக வழங்கினார். பித்தோரா ஓவியம் குஜராத்தின் சோட்டா உதய்பூரை சேர்ந்த கைவினைஞர்களால் உருவாக்கப்படுகிறது. பழங்குடி மக்களின் நாட்டுப்புற கலையை பிரதிபலிக்கும் வகையில் ஓவியம் இருந்தது.
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு துணியால் ஆன துர்கை ஓவியத்தை அன்பளிப்பாக வழங்கினார். சிங்க வாகனத்தில் துர்க்கை அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கும் இந்த ஓவியம் குஜராத்தில் உருவாக்கப்பட்டது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு இயற்கை வண்ணங்களை கொண்டு உருவாக்கப்பட்ட அழகிய ராதா - கிருஷணன் படத்தை பிரதமர் மோடி பரிசாக வழங்கினார். இது இமாச்சலப் பிரதேசத்தின் கங்க்ரா ஓவியமாகும்.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் மற்றும் ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் ஆகியோருக்கு குஜராத்தின் கட்ச் பகுதியில் தயாரிக்கப்படும் அகேட் கிண்ணத்தை பரிசாக வழங்கினார்.
இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு குஜராத்தில் பிரத்யேகமாக தயாரிக்கப்படும் சால்வையை பரிசாக வழங்கினார். ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செசுக்கு இமாச்சலில் தயாரிக்கப்படும் கனல் பித்தளை இசைக்கருவி செட்டை வழங்கினார்.
இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோவுக்கு சூரத்தில் தயாரிக்கப்பட்ட வெள்ளிக் கிண்ணம், இமாச்சலில் தயாரிக்கப்பட்ட புகழ்பெற்ற சால்வையும் பரிசாக வழங்கினார். பிரதமர் வழங்கிய இந்த பரிசு பொருட்கள் இணையத்தில் பேசுபொருளாகியிருக்கிறது.