பிரதமர் மோடி Vs ராகுல் காந்தி கூட்டணி.. எந்த கட்சிகளுக்கு பலம் அதிகம்..? டெல்லியில் மவுசு காட்டும் அதிமுக

x

டெல்லியில் பாஜக கூட்டணி கூட்டத்திலும், பெங்களூரு எதிர்க்கட்சிகள் கூட்டணி கூட்டத்திலும் பங்குபெற்ற கட்சிகள் விபரம், பலம் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் 38 கட்சிகள் கலந்து கொண்டதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

இதில் கூட்டணிக்கு தலைமை ஏற்றிருக்கும் பெரிய கட்சியான பாஜகவுக்கு மக்களவையில் 301 எம்.பி.க்கள் உள்ளனர். குஜராத், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, அருணாச்சலம், அசாம், திரிபுரா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் தனித்தும், மராட்டியம், அரியானா, சிக்கிம், நாகாலாந்து, மேகாலயாவில் கூட்டணி ஆட்சியிலும் உள்ளது.

கூட்டத்தில் கலந்துகொண்ட ஷிண்டே தரப்பு சிவசேனா, மக்களவையில் 13 எம்.பி.க்கள் ஆதரவு இருப்பதாக சொல்கிறது.

இப்போது பிரிந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியில் அஜித் பவார் அணி பாஜக கூட்டத்தில் பங்கேற்றது.

பீகாரை சேர்ந்த லோக் ஜன சக்தி 2019 தேர்தலில் 6 இடங்களில் வென்றது.

பாஜக கூட்டணியில் பெரிய கட்சியாக பார்க்கப்படும் அதிமுகவுக்கு முக்கிய இடம் வழங்கப்பட்டது. கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு அருகே எடப்பாடி பழனிசாமி நிறுத்தப்பட்டிருந்தது தனிக்கவனம் பெற்றது

கூட்டத்தில் பாஜக கூட்டணியின் தென்னிந்திய பிரதிநிதியாக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மக்களவைவில் அதிமுகவுக்கு ஒரு எம்.பி. இருந்தாலும், எடப்பாடி தரப்பு அவர் தங்கள் கட்சியை சேர்ந்தவர் இல்லை என கூறிவிட்டது.

அப்னா தளம் சோனேலால் 2 எம்.பி.க்கள் உள்ளனர். மேகாலயாவை சேர்ந்த தேசிய மக்கள் கட்சிக்கு ஒரு எம்.பி.யும், நாகாலாந்தை சேர்ந்த தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சிக்கு ஒரு எம்.பி.யும் உள்ளனர். சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சாவுக்கு ஒரு எம்.பி.யும், மிசோ தேசிய முன்னணிக்கு ஒரு எம்.பி.யும், நாகா மக்கள் கட்சிக்கு ஒரு எம்.பி. உள்ளனர்.

என்.ஆர். காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி இடம் பெற்றுள்ளது. பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி, ஜானக்கிய ஜனதா கட்சி, ஜார்க்கண்ட் மாணவர் கூட்டணி கட்சி, சிரோன் மணி அகாலி தளம் சன்யுக், கேரளா காமராஜ் காங்கிரஸ் மற்றும் 18 சிறு கட்சிகளும் பங்கேற்றன.

இதுவே பெங்களூருவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பெரிய கட்சியான காங்கிரசுக்கு மக்களவையில் 49 எம்.பி.க்கள் உள்ளனர். கர்நாடகா, ராஜஸ்தான், சத்தீஷ்கர், இமாச்சலில் ஆட்சியில் உள்ளது. பீகார், தமிழ்நாடு, ஜார்க்கண்டில் கூட்டணி ஆட்சியில் உள்ளது.

மேற்கு வங்கத்தில் ஆளும் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 24 மக்களவை எம்.பி. உள்ளனர்.

தமிழ் நாட்டில் ஆளும் திமுகவுக்கு மக்களவையில் 24 எம்.பி.க்கள் உள்ளனர்.

பஞ்சாப், டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு மக்களவையில் ஒரு எம்.பி. உள்ளார். நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 16 மக்களவை எம்.பி.க்கள் உள்ளனர். பீகாரில் கூட்டணி ஆட்சியில் உள்ள லாலு பிரசாத் யாதவின் ராஷ்டீரிய லோக் தளம் கட்சிக்கு மக்களவையில் எம்.பி. இல்லை.

ஜார்க்கண்டில் ஆளும் ஹேமந்த் சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு மக்களவையில் ஒரு எம்.பி. உள்ளார்.

சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி பிளவுபட்டுள்ளது. கட்சியை பிரித்த அஜித் பவார் பாஜக கூட்டத்திற்கு சென்றுவிட்டார். உடைந்த சிவசேனாவில் உத்தவ் தாக்கரே அணி கலந்துக்கொண்டது.

80 தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேசத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சிக்கு 3 மக்களவை எம்.பி.க்கள் உள்ளனர்.

கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 3 எம்.பி.க்கள் உள்ளனர்.

ராஷ்டீரிய லோக் தள், அப்னா தளம் காமராவாடி கட்சி, தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, ஆல் இந்தியா பார்வர்டு பிளாக், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கேரள காங்கிரஸ் மாணி, கேரள காங்கிரஸ் ஜோசப் உள்பட 26 கட்சிகள் பங்கேற்றன.


Next Story

மேலும் செய்திகள்