நள்ளிரவில் கொல்லப்பட்ட அரசியல் பிரமுகர்... அரசியல் பகையா..? முன்விரோத வெறியா..?
மை இருட்டில் மயானம் போல காட்சியளிக்கிறது அந்த ரயில்வே சுரங்கப்பாதை. கும்மிருட்டுக்குள் நுழைந்த போலீஸ் படை, ஒரு கொலைகான தடையத்தை அங்குலம் அங்குலமாக தேடியிருக்கிறது. நடந்திருக்கும் கொடூரத்தால் அந்த பகுதி முழுவதையும், தங்கள் கட்டுபாட்டில் கொண்டு வந்த காவல்துறையினர், கொலை குற்றவாளி குறித்தும், கொலைகான காரணம் குறித்தும் விசாரணையில் இறங்கி இருக்கிறார்கள். கொல்லப்பட்டவர் பிச்சை ராஜு. நெல்லை மாவட்டம் மயிலப்பபுரம் பகுதியை சேர்ந்தவர். அதிமுகவின் முக்கிய புள்ளிகளில் ஒருவர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 பிள்ளைகள் உள்ளனர். 52 வயதான இவர் பிச்சை ராஜூ நெல்லை மாநகராட்சியின் 18 ஆவது வார்டு மெம்பர்.
அரசியலில் முக்கிய நபராக பிச்சை ராஜூ கருதப்பட்டாலும், அவரது முதன்மையான தொழில் டாஸ்மாக் பார் நடத்துவது. பேட்டை எம்ஜிஆர் நகரில் பிச்சை ராஜூக்கு சொந்தமான பார் இயங்கி வந்திருக்கிறது. சம்பவம் நடந்தன்று இரவு, பாரில் வேலைகளை முடித்துவிட்டு வீடு திரும்பியிருக்கிறார் பிச்சை ராஜு. பேட்டை வீரபாகுநகர் ரயில்வே சுரங்கத்திற்குள் நுழைந்ததும், அவரை ஒரு மர்ம கும்பல் வழி மறித்திருக்கிறது. என்ன நடக்கிறது என்று நிதானிப்பதற்குள் அந்த கும்பல் பிச்சை ராஜூவை சரமாரியாக வெட்டி சாய்த்துவிட்டு தப்பி சென்றிருக்கிறது. இரத்த வெள்ளத்தில் குத்துயிரும் குலையுயிருமாக கிடந்த கிடந்த பிச்சை ராஜுவை, சுரங்கம் வழியே வந்த ரயில்வே பயணிகள் பார்த்திருக்கிறார்கள். உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிச்சை ராஜூவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். ஆனால் அதிக இரத்த போக்கு காரணமாக மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்து போயிருக்கிறார்.
சம்பவம் நடந்த அன்று பாரில் இரண்டு பேர் பிச்சை ராஜூவிடம் பிரச்சினையில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களை பிச்சை ராஜூ அடித்ததாக சொல்லப்படுகிறது. அந்த பகையின் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார், அவர்கள் இருவரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர். அதே போல் பிச்சை ராஜூக்கு அரசியல் முன்பகையும் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த இரண்டு கோணங்களிலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். முழுமையான விசாரணைக்கு பிறகு உண்மை தெரியவரும்.