"அம்மாக்களை பார்த்து கத்துக்கோங்க" - பிரதமர் மோடியின் செம அட்வைஸ்
நமது தாய்மார்களிடமிருந்து நேர மேலாண்மையை மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மாணவர்கள் பயமின்றி எப்படி பொதுத் தேர்வை எதிர்கொள்வது என்பது குறித்து நடைபெற்ற "பரிக்ஷா பே சர்ச்சா" நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். டெல்லியில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான மாணவர்களுடன் பிரதமர் உரையாடி அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது பேசிய அவர், பார்வையாளர்களின் எந்த விதமான அழுத்தத்திற்கும் காது கொடுக்காமல் பந்தின் மீது மட்டுமே கவனமாக இருக்கும் பேட்ஸ்மேன்களை போல கவனமுடன் விடாமுயற்சியுடன் தேர்வுகளை எழுத வேண்டும் என அறிவுறுத்தியதுடன் மாணவர்கள் ஒருபோதும் தங்களை குறைத்து மதிப்பிட வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.
நேர மேலாண்மை திறனை மாணவர்கள் தங்களின் தாய்மார்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்த பிரதமர் மோடி, சுமையாக உணராமல் பணிகளை அவர்கள் எப்படி கையாளுகிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார்.
தேர்வுகளில் முறைகேடு செய்வதற்காக படைப்பாற்றலைப் பயன்படுத்தும் சில மாணவர்கள் அதை நல்ல வழியில் பயன்படுத்தினால் வெற்றியின் உச்சத்தை அடைய முடியும் என குறிப்பிட்டார்.
அத்துடன் மாணவர்கள் எலக்ட்ரானிக் சாதனங்களுக்கு அடிமையாகக் கூடாது என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.