1500 அடி மலை மேல் காட்சி தரும் பெருமாள்... திருமண வரன் கிடைக்க மாவிளக்கு போட்டு வழிபாடு
திருமணம் ஆகாதவர்களின் குறையை தீர்த்து வைக்கும் திருச்சி பெருமாள் மலை பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலின் சிறப்புகளை தினம் ஒரு தரிசனம் பகுதியில் பார்க்கலாம்..
தரை மட்டத்தில் இருந்து சுமார் 1500 அடிக்கு மேல் மலையின் மீது அமைந்துள்ளது வெங்கடாஜலபதி கோயில்..பெருமாள் இந்த மலையில் குடிக்கொண்டுள்ளதால் இம்மலையை பெருமாள் மலை என்றே அழைக்கின்றனர்.
கரிகால சோழ பெருவளத்தானின் பேரனானவன் பெருமாளை நேரில் தரிசனம் செய்ய இம்மலை மீது இலந்தை மரத்தின் கீழ் அமர்ந்து கடும் தவம் புரிந்தாராம்..
அவருடைய தவத்தால் மகிழ்ந்த பெருமாள் திருமணக் கோலத்தில் காட்சி தந்து என்ன வரம் வேண்டும் என கேட்டிருக்கிறார்..
பெருமானின் அழகை கண்ட பெருவளத்தானின் பேரன் தாங்கள் தனக்கு காட்சி அளித்தது போல இவ்வூர் மக்கள் வந்து வழிபட இங்கேயே குடியிருக்க வேண்டும் என வரம் கேட்டாராம்...
அவரின் வேண்டுதலுக்கினங்க பெருமாளும் கல்யாண கோலத்தில் இங்கு பிரசன்னமாகியதாக கூறுகிறது வரலாறு...
மூலவராக ஸ்ரீதேவி பூமிதேவி சமேத பிரசன்ன வெங்கடாசலபதி காட்சி தருகிறார். அவருக்கு அருகில் தனி சன்னதியில் பத்மாவதி தாயார் காட்சி தருகிறார்..
மூலவர் கையில் செங்கோலுடன் காட்சி தருவது எங்கும் இல்லாத சிறப்பு..
குழந்தை கருப்பண்ண சாமிக்கு இங்கு தனி சன்னதியும் அமைக்கப்பட்டுள்ளது.
பெருமாள் இங்கு மணக் கோலத்தில் காட்சி தருவதால் திருமணம் ஆகாதவர்கள் இங்கு வந்து மா விளக்கு ஏற்றி இரு தேங்காய் வைத்து பூஜை செய்வதால் திருமண பாக்கியம் உண்டாவதாக நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்..
மேலும் குழந்தை வரம் பெற இலந்தை மரத்தில் தொட்டில் கட்டியும் அம்பாளுக்கு வளையல் அணிவித்தும் வழிபடுகிறார்கள்...
வேலையின்மை மற்றும் உயர் பதவி வேண்டுபவர்கள் இங்கு அமைத்துள்ள 1576 படிகளை ஏறி வனங்குவதால் உயர்வு பெறுவார்கள் என்பது ஐதீகம்..
மேலும் இங்கு வரும் பக்தர்களுக்கு தேங்காய் துறுவலில் வெல்லம் கலந்த கலவை பிரசாதமாக வழங்கப்படுகிறது.
கோயிலானது காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்திருக்கும்.
திருச்சியில் இருந்து 42 கிலோ மீட்டர் பயணித்தால் கோயிலை வந்தடையலாம்.