ஊராட்சி மன்றத் தலைவியை வசைபாடிய நபர்...கொந்தளித்த கிராம மக்கள் - மன்னிப்பு கேட்ட திமுக பிரமுகர்
திருப்பத்தூர் அருகே திமுக பிரமுகர் சாதிப் பெயரைச் சொல்லித் திட்டி அவதூறாகப் பேசியதாகக் கூறி 200க்கும் மேற்பட்டோர் அரசு பேருந்தை சிறைபிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.பொம்மிக் குப்பம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் தேன்மொழி வெங்கடேசன்... இவரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்த திமுகவைச் சேர்ந்த சாமு அக்கட்சியின் ஒன்றிய மாணவரணி அமைப்பாளராக உள்ளார். இவர் ஆக்கிரமிப்பு செய்ததை ஊராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு ஊராட்சி மன்றத் தலைவி தேன்மொழி வெங்கடேசனின் ஊரான பழைய அத்திக்குப்பத்திற்குச் சென்ற சாமு அங்குள்ள பெண்களை மதுபோதையில் கீழ்த்தரமான வார்த்தைகளால் அவதூறாக பேசியதாகவும் சாதியைச் சொல்லி திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் உட்பட பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டவர்கள் திருப்பத்தூர் செல்லும் சாலையில் அரசு பேருந்தை சிறைபிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவியின் சமாதான பேச்சுவார்த்தைக்குப் பிறகு சாமு மன்னிப்பு கோரிய நிலையில், மறியல் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது