பட்டா கத்தியுடன் புகுந்து அட்டகாசம்...கஞ்சா போதையில் அடித்து நொறுக்கிய பயங்கரம்

x

காஞ்சிபுரம் அருகே ஏகனாம்பேட்டை செல்லியம்மன் நகர் பகுதியில், கஞ்சா போதையில் கையில் பட்டா கத்தியுடன் சுற்றித்திரிந்த இளைஞர் ஒருவர், கலைவாணி என்பவரது வீட்டுக்குள் புகுந்து கண்ணில் பட்டதை எல்லாம், அடித்து நொறுக்கியுள்ளார். அப்போது வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்த குழந்தைகளை கஞ்சா போதை ஆசாமி மிரட்ட, மிரண்டுபோன குழந்தைகள் வீட்டிலிருந்து தப்பித்து வெளியே சென்ற நிலையில், தங்களது தாய் கலைவாணியிடம் கூறியுள்ளனர். ஆனால், வீட்டிற்குள் வந்த கலைவாணியையும், அந்த கஞ்சா போதை ஆசாமி, தரக்குறைவாக பேசியதுடன், பட்டாக் கத்தியைக் கொண்டு தாக்க முற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் பயந்துபோன கலைவாணி, வீட்டை வெளிப்பக்கமாமக பூட்டியுள்ளார். இதனைக் கண்டு கோபமடைந்த இளைஞர், தனது பங்கிற்கு, உள்தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு, வீட்டில் இருந்த பொருட்களை சல்லி சல்லியாக அடித்து நொறுக்கியுள்ளார்... இந்த சம்பவம் குறித்து, வீட்டின் உரிமையாளர் கலைவாணி, வாலாஜாபாத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உள்தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு வீட்டிற்குள் இருந்த இளைஞரை அழைத்துள்ளனர். ஆனால் இளைஞர் வெளியே வராததால், கதவை உடைத்துக் கொண்டு போலீசார் உள்ளே சென்றனர்.

அப்போது, கஞ்சா போதையில் மயங்கி கிடந்த இளைஞரை போலீசார் மடக்கிப் பிடித்து வெளியே அழைத்து வந்ததுடன், கையில் வைத்திருந்த பட்டாக்கத்தியையும் பறிமுதல் செய்தனர். போலீசாரின் விசாரணையில் கஞ்சா போதையில் இருந்த இளைஞர், வெண்குடி கிராமத்தைச் சேர்ந்த அஜித் என தெரிய வந்தது.கஞ்சா போதை ஆசாமியின் செயலால் அந்தப் பகுதி பரபரப்புக்கு உள்ளான நிலையில், இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்