பெண் டாக்டரை மார்பில் குத்தி கொன்ற கொடூர நோயாளி.. அரசு மருத்துவமனையில் பயங்கரம்
கேரளா மாநிலம் கொட்டாரக்கரை அருகே பூயப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சந்தீப். ஆசிரியரான இவர், மதுபோதையில் தகராறு செய்ததால் பள்ளியிலிருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், குடும்பத்துடன் தகராறில் ஈடுபட்டு சிலரை தாக்கியதால் கைது செய்யப்பட்ட சந்தீப், உடலில் ஏற்பட்ட காயத்தால் கொட்டாரக்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆரம்பத்தில், அமைதியாக சிகிச்சை பெற்று வந்த சந்தீப், பின்பு திடீரென செவிலியர்களுடன் தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில், சந்தீப்பை தட்டிக்கேட்ட பெண் மருத்துவர் வந்தனா தாஸை, கத்திரிக்கோலால் மார்பு மற்றும் வயிற்றுப்பகுதியில் குத்தி சந்தீப் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை கண்டித்து இந்திய மருத்துவ சங்கம் போராட்டம் நடத்தி வரும் நிலையில், சம்பவ இடத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கேரள நீதிமன்றம் வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரணை நடத்த உள்ளது.