"பரந்தூரை தேர்வு செய்தது தமிழக அரசு தான், நாங்கள் அல்ல" - மத்திய அமைச்சர் வி.கே சிங்
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, ஏகனாபுரம் கிராம மக்கள் 185-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டாரத்தில் 13 கிராம பகுதிகளை உள்ளடக்கி, பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையம் அமைப்பதால், தங்களின் இருப்பிடமும், வாழ்வாதாரமான விளைநிலங்களும் பறிபோய் விடும் எனக் கூறி, கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஏகனாபுரத்தில், 185-வது நாளாக கிராம மக்கள் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வளர்ச்சி என்ற பெயரை சொல்லி, அம்பானிக்கும் அதானிக்கும் அடகு வைக்கப் பார்க்காதே என்ற கிராம மக்கள், விமான நிலையம் வேண்டாம் என முழக்கமிட்டனர்.
விவசாய நிலத்தில் விமான நிலையம் அமைக்கும் முடிவை கைவிட்டுவிட்டு, மாற்று இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என்றும், மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.