ஊட்டி பிளஸ் டூ விவகாரம்.. வெளியிடப்படாத கணித மதிப்பெண்கள் - பெற்றோருடன் கலெக்டர் அலுவலகம் முற்றுகை
உதகையில் ப்ளஸ் டூ தேர்வில் கணித பாடத்தின் மதிப்பெண்களை வெளியிட கோரி மாணவர்கள் ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.
சாம்ராஜ் அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றும் 2 ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு அறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் விடை எழுத உதவி செய்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரில் தொடர்புடையதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஐந்து அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் உள்பட 40-க்கும் மேற்பட்டோர்களிடம் விசாரணை நடந்தது. அதன் பின் முதன்மை கல்வி அலுவலர்கள் ஓரிரு நாளில் மாணவர்களுக்கான கணித தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று கூறியிருந்த நிலையில் தற்போது வரை தேர்வு முடிவு அறிவிக்கப்படவில்லை. இதனையடுத்து 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பெற்றோருடன் உதகையில் ஆட்சியரை நேரில் சந்தித்தனர். ஆட்சியரிடம், சர்ச்சைக்குரிய 2 மாணவர்களை தவிர மற்ற 32 மாணவர்களின் கணித தேர்வு மதிப்பெண்களை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினர். கணித தேர்வு முடிவுகள் வெளி வராமல் உள்ளதால், தங்கள் பிள்ளைகளை கல்லூரியில் சேர்ப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.