(11.07.2023) ஊர்ப்பக்கம் | Oorpakkam | தமிழக செய்திகள் | Thanthi TV

x

தென்னை விவசாயிகளின் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண, ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல் இலக்கை 90 ஆயிரம் டன்னாக உயர்த்த வேண்டும் என பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியதை வானதி சீனிவாசன் வரவேற்றுள்ளார். கொப்பரைத் தேங்காய்க்கு உரிய விலை கிடைக்காத‌தால் விவசாயிகள் இழப்பை சந்தித்து வருவதாக குறிப்பிட்டுள்ள அவர், விவசாயிகளுக்கு லாப‌ம் கிடைக்க வேண்டும் என்றால், ரேஷன் கடைகளில் பாமாயிலுக்குப் பதில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

வாலாஜாபேட்டை அடுத்த பெல்லியப்பா நகரில் செயல்படும் ரேஷன்கடையில் கலைவாணி என்பவர் அரிசி வாங்கியுள்ளார். வீட்டிற்கு வந்தவுடன் சமைப்பதற்காக அந்த அரிசியை எடுத்த போது அதில் பூச்சிகள் இருந்துள்ளது. பின்னர் அதனை கழுவுவதற்காக தண்ணீரில் ஊறவைத்தால், அரிசி சில நிமிடங்களில் பொறி போன்று உப்பியுள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் மற்றும் அப்பகுதி மக்கள், ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

பழனியில், வாழைப்பழ குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பட்டத்து விநாயகர் கோயில் அருகே அப்பாஸ் என்பவருக்கு சொந்தமான வாழைப்பழ குடோன் அமைந்துள்ளது. இங்கு மின்கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் சுமார் 1 லட்ச ரூபாய் மதிப்பிலான வாழைப்பழங்கள் எரிந்து நாசமடைந்தன.

கரூர் மாநகரின் மையப்பகுதியில் உள்ளது கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம். இங்கு வழக்கமாக இரவு 8.30 மணியளவில் பள்ளியறை பூஜை முடிந்ததும், கோவில் நடை சாற்றப்படுவது வழக்கம். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை பள்ளியறை பூஜையின் போது, வழக்கத்திற்கு முன்பே திரை சீலை மூடப்பட்டுள்ளது. இதற்கு ஆட்சேபனை தெரிவித்து சிவனடியார்களுக்கும், அர்ச்சகர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்