(16.07.2023) ஊர்ப்பக்கம் | Oorpakkam | தமிழக செய்திகள் | Thanthi TV
சென்னை மணலியில் உள்ள டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காமராஜரின் 121-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பள்ளியில் வைக்கப்பட்ட காமராஜரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் திரைப்பட இயக்குநர் பி சி நாஞ்சில் அன்பழகன், பள்ளி மாணவிகளின் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
செஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 29 அரசு மற்றும் அரசு உதவிபெறும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது. இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், மகளிர் உரிமை தொகையை அனைவருக்கும் எப்படி, கொடுக்க முடியும் என்றும், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள ஏழை மக்களுக்கே வழங்கமுடியும் என்றும் தெரிவித்தார்.
ரிஷிவந்தியம் அருகே உள்ள ஆதிதிருவரங்கத்தில் உள்ளது அரங்கநாதர் கோவில். இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலை பராமரிப்பு பணிக்காக அறநிலையத்துறை சார்பில் ரூபாய் 8 கோடி அளவில் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கோவிலின் புனரமைப்பு பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. இதனால் விரைவில் குடமுழுக்கு திருவிழா நடைபெறும் என பக்தர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
சென்னை கொடுங்கையூரில், இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். கடந்த 2-ம் தேதி, முத்தமிழ்நகரில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த பைக் திருடு போனதாக அதன் உரிமையாளர் புகாரளித்திருந்தார். இதுகுறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், ஒரு பெண், ஒரு ஆண் என இருவர் பைக் திருட்டில் ஈடுபட்டதை கண்டறிந்தனர். இதனையடுத்து திருட்டில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த பெண்ணை கைது செய்த கொடுங்கையூர் குற்றப்பிரிவு போலீசார், தலைமறைவாக உள்ள நபரை தேடி வருகின்றனர்.
சென்னையை அடுத்த ஆலந்தூர் பரங்கிமலை ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் வசித்து வரும் பெண் போலீஸ் ஓம்சக்தி என்பவரின் வீட்டு பீரோவை உடைத்து 14 பவுன் தங்க நகை திருட்டு போயிருந்தது. இதுகுறித்து பரங்கிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியின் கைரேகையை ஆய்வு செய்தனர்.
அது ஆந்திராவை சேர்ந்த பழைய குற்றவாளி வெங்கடேஷ்வரலு(42) என்பவரின் கைரேகையுடன் ஒத்து போனதால் அவரை கைது செய்து விசாரித்தனர். அவரிடம் திருட்டு நகை என தெரிந்தும் அதை பாதி விலைக்கு வாங்கிய தனியார் வங்கி மேலாளர் புஷ் ரெட்டி(36), நகை மதிப்பீட்டாளர் அய்யனார்(35) ஆகியோரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 10 பவுன் தங்க நகைகள், 125 கிராம் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
தர்மபுரி நகராட்சியில் குப்பை கொட்ட தடை செய்யப்பட்ட சில இடங்களில், பொதுமக்கள் தொடர்ந்து குப்பைகளை கொட்டி வருவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நகராட்சி பள்ளியில் மாணவர்கள் படிக்க முடியாமல் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று நகராட்சி தூய்மை பணியாளர்கள், நகராட்சி பள்ளி சுவற்றின் அருகே கொட்டப்பட்டிருந்த குப்பைகளை அகற்றி அந்த இடத்தை சுத்தம்செய்து இங்கு குப்பைகொட்ட வேண்டாம் என வலியுறுத்தி கோலம் போட்டனர். மேலும், பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தவிர்த்து குப்பைத் தொட்டியில் மட்டும் குப்பைகளை கொட்ட வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.