குறுக்கு வழியை யோசித்த இளைஞர்கள்...லட்சம் லட்சமாக கொட்டிய காசு, துட்டு

பணம் சம்பாதிப்பதற்காக, இரும்புத்திரை பட பாணியில், ஆன்லைன் மோசடி செய்து ஏமாற்றி வந்த 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
x

நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 6 இளைஞர்கள், ஐ.டி.ஐ. முடித்துவிட்டு, சென்னை பெரம்பலூரில் உள்ள ரயில் பெட்டிகள் தயாரிக்கும் ஐ.சி.எப். தொழிற்சாலையில், வெல்டர் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் பணிபுரிந்து வந்துள்ளனர். இவர்களுக்கு மாதம் சம்பளம் 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. வருமானம் போதவில்லை என்பதால், பணத்தை வேறு வழியில் சம்பாதிக்க, குறுக்கு வழியை அந்த இளைஞர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.

இந்த நிலையில்தான், இரும்புத்திரை படத்தில் வரும் சம்பவங்கள் போலவே, ஆன்லைன் மோசடியில் ஈடுபடலாம் என்கிற எண்ணம் தோன்றியுள்ளது. அதன்படி, கூகுளில் உள்ள வாட்ஸ் அப் குழுக்களில் தங்களை இணைத்துக் கொண்ட இளைஞர்கள், அந்தக் குழுவில் செல்போன்கள் விற்பனைக்கு உள்ளதாக பதிவிட்டுள்ளனர்.

இந்த விளம்பரத்தை பார்த்த சிலர், குறைவான விலையில் விலை மதிப்பிலான செல்போனா? என நம்பி வாங்க முயன்றுள்ளனர். பின்னர் அதில் குறிப்பிடப்பட்ட வங்கிக் கணக்கு எண்ணிற்கு பணம் செலுத்திய பின்னரே, தாம் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பணம் செலுத்திய பின்பு, செல்போனில் பயன்படுத்தப்பட்ட சிம்கார்டு தூக்கி எறியப்படுவதுடன், வங்கிக் கணக்கையும் அந்த இளைஞர்கள் மாற்றியதால், பணத்தை கட்டியவர்கள் செய்வதறியாது தவித்துள்ளனர்.

இதேபோல், ஒவ்வொரு மோசடிக்கும், ஒரு வங்கி கணக்கு, ஒரு செல்போன் எண் என தொடர்ந்து ஆன்லைன் மோசடியில் பலே கில்லாடிகளாக செயல்பட்டு வந்துள்ளது அந்தக் கும்பல்...

இதனிடையேதான், திருவாரூர் நகரத்திற்கு உட்பட்ட தெற்கு வீதியில், செல்போன் கடை வைத்திருக்கும் பருதி என்பவர், வாட்ஸ் அப் குழுவில் வந்த விளம்பரத்தைப் பார்த்துள்ளார். அதில், 3 செல்போன்கள் விற்பனைக்கு உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்ததை அடுத்து, தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு, 39 ஆயிரத்து 750 ரூபாய் பணத்தை, அவர்கள் கூறிய வங்கிக் கணக்கிற்கு செலுத்தியுள்ளார். அதன்பின் அந்த நபர்களை தொடர்புகொள்ள முடியாததால், அதிர்ச்சி அடைந்த பருதி, காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில், சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டது நாகை மாவட்டம் சிக்கல் பகுதியை சேர்ந்த ஹரிபிரசாத் மற்றும் ஆகாஷ் என்பது தெரியவந்தது.

பின்னர் அவர்கள் குறித்த தகவல்களை திரட்டிய திருவாரூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார், சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்த இருவரையும் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரிடம் இருந்து 40 ஆயிரம் ரூபாயையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்ற 4 பேரையும், போலீசார் தேடி வருகின்றனர். பின்னர், நடத்தப்பட்ட விசாரணையில், ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டால் யாருக்கும் தெரியாது என நினைத்து இந்த குற்றச்செயலில் ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், கோவை, மதுரை, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில், இந்த 6 பேரும் சேர்ந்து, பல்வேறு நபர்களை ஏமாற்றியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்