"ரெய்டுக்கு போறது அதிகாரிகளுக்கே தெரியாது""கரூரில் இப்படி நடக்கும்-னு யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டாங்க" - ஓய்வு பெற்ற வருமான வரித்துறை அலுவலர் தகவல்

x

வருமானவரித்துறை சோதனை குறித்து முறையான தகவல் தெரிவிக்கப்படவில்லை என கரூர் எஸ்.பி. தெரிவிக்கும் சூழலில், வருமான வரித்துறை சோதனைக்கான நடைமுறைகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்...


தமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 40 இடங்களில் டாஸ்மாக் மற்றும் மின்துறை ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையை மேற்கொண்டனர்.

கரூரில் ராமகிருஷ்ணாபுரத்தில் வருமான வரித்துறை சோதனையில் அதிகாரிகளின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை தொடர்பாக எந்தவித முன் தகவலையும் மாவட்ட காவல்துறையினரிடம் தெரிவிக்கவில்லை என்றார் கரூர் மாவட்ட கண்காணிப்பாளர் சுந்தரவதனம்..

சோதனை நடைபெறுவதாக மாவட்ட காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் ஒன்பது இடங்களுக்கு 150 போலீசார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.

போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என கரூர் மாவட்ட கண்காணிப்பாளர் தெரிவிக்கும் சூழலில், ஓய்வு பெற்ற வருமானவரி அலுவலர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தியிடம் பேசினோம்.

அவர் பெரும்பாலும் எங்கு செல்கிறோம் என வருமான வரித்துறை அதிகாரிகள் குழுவில் இருப்பவர்களுக்கே தெரிவது இல்லை எனவும் வழக்கமாக முன்கூட்டியே காவல்துறைக்கு தகவல் சொல்வது இல்லை எனவும் தெரிவித்தார்.

வழக்கமாக அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களில் மத்திய தொழில் பாதுகாப்புப்படையை பாதுகாப்புக்கு அழைப்போம் எனவும் பாஸ்கரன் குறிப்பிட்டார். கரூரில் இதுபோன்று நிகழும் என வருமான வரித்துறை அதிகாரிகள் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள் எனக் குறிப்பிட்ட பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி, வருமான வரித்துறை அதிகாரிகள் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கையை எடுத்திருக்கலாம் எனவும் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்