நர்சிங் கல்லூரி மாணவர் தூக்குபோட்டு தற்கொலை....தற்கொலையா? கொலையா? கோணத்தில் போலீசார் விசாரணை
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே, நர்சிங் கல்லூரி விடுதியில் தங்கி இருந்த மாணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூரைச் சேர்ந்த சுமித்திரன் என்பவர், படந்தாலுமூடு பகுதியில் இயங்கி வரும் கல்லூரி விடுதியில் தங்கி இருந்து, செவிலியர் பாடப்பரிவில் 2ம் ஆண்டு படித்து வந்தார். வகுப்பு முடிந்து தனது அறைக்கு வந்த சுமித்திரன், சக மாணவர்களுடன் பேசாமல் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. நள்ளிரவு நேரத்தில், கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்ற சுமித்திரன், விடுதியின் மேல்மாடியில் இருந்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைப் பார்த்த மற்ற மாணவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஏற்கனவே, மாணவ, மாணவிகளை, ஆசிரியர்கள் துன்புறுத்துவதாக கல்லூரி நிர்வாகம் மீது புகார் எழுந்துள்ள நிலையில், சுமித்திரனின் இறப்பு போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலையா? கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.