கூட்டாளியை தீர்த்துக்கட்டி தாமிரபரணியில் வீசிய பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் - போலீசாரிடம் அதிர்ச்சி வாக்குமூலம்

x

விருதுநகரில், தனது கூட்டாளியை கொலை செய்த வழக்கில் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் கைது செய்யப்பட்டார். அதன் பின்னணியை விவரிக்கிறது இந்த தொகுப்பு...

கழுத்து நெரிக்கிற அளவுக்கு ஜொலிக்கும் தங்கம்... பத்து விரல்களிலும் பளபளக்கும் மோதிரம்னு வலம் வந்தவர் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம்...

ஜோக்கராக இருந்து கொண்டு நானும் ரவுடி தான் என கூறுவோர் மத்தியில், ரவுடி பதவியே வேண்டாம், திருந்தி வாழப்போகிறேன்... தன்னை ரவுடி என்பதை விட ஜோக்கர் என அழையுங்கள் எனக்கூறி சிரிப்பலையை ஏற்படுத்தியவர்...

ஆனால், முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது போல, கூட்டாளியை கொலை செய்த சம்பவத்தில், வரிச்சியூர் செல்வம் தற்போது சிறையில் தள்ளப்பட்டுள்ளார்.

விருதுநகர் அல்லம்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார்... இவர் மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளியாக இருந்து வந்தார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், செந்தில்குமார் காணாமல் போனதாக அவருடைய மனைவி முருகலட்சுமி, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கில், நீதிமன்ற உத்தரவுப்படி, தனிப்படை அமைக்கப்பட்டு, காணாமல் போன செந்தில் குமாரை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில்தான், செந்தில்குமாரை அவருடைய கூட்டாளியான மதுரை சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம், கடைசியாக விருதுநகருக்கு வந்து அழைத்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து, வரிச்சியூர் செல்வத்தை தேடி வந்த தனிப்படை போலீசார், அவரை கைது செய்து தங்களது பாணியில் விசாரணை மேற்கொண்டனர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

செந்தில்குமாருக்கும், வரிச்சியூர் செல்வத்துக்கும் இடையே தொழில் ரீதியாக கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இதனை மனதில் வைத்து, செந்தில்குமாரை தீர்த்துக்கட்ட முடிவு செய்த வரிச்சியூர் செல்வம், தனது கூட்டாளிகள் 6 பேருடன் சேர்ந்து செந்தில்குமாரை கொலை செய்ததுடன், உடலை தாமிரபரணி ஆற்றில் வீசியதாக வாக்குமூலம் அளித்தது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில், வரிச்சியூர் செல்வத்தை சாத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், பின்னர் சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்