இளைஞர்களை சுண்டியிழுக்கும் Nothing.. ஐபோனுக்கே வேட்டு வைக்கும் அம்சங்கள்? - Nothing Phone 2-ல் என்ன இருக்கு?
நத்திங் நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்துள்ள நத்திங் போன் 2 என்ற ஸ்மார்ட்போன், பல்வேறு புதிய அம்சங்களுடன் களமிறங்கி உள்ளது. ஐபோனுக்கே சவால் விடும் வகையில் இருக்கும் அதன் அம்சங்கள் குறித்து பார்க்கலாம்...
முன் எப்போதும் இல்லாத வகையில், வெளிப்புற தோற்றத்தில் அசத்தலான டிசைனுடன் வெளிவந்த நத்திங் போன், ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்களின் கண்களை ஈர்த்தது.
பின்புறத்தில் இருக்கும் எல்.இ.டி. லைட்டுகள், அதன் மிகப்பெரிய விற்பனைப்புள்ளியாக பார்க்கப்பட்டன. இந்நிலையில், லண்டனை தலைமையகமாக கொண்ட நத்திங் நிறுவனம் நத்திங் போனின் 2வது வெர்ஷனை அறிமுகம் செய்துள்ளது.
முந்தைய மாடலில் இருந்து டிசைனில் மிகப்பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை என்றாலும், இதில் கொடுக்கப்பட்டிருக்கும் அம்சங்கள் ஏராளம்.
நத்திங் ஓ.எஸ். 2 இயங்குதளத்தில் செயல்படும் இந்தப் போனில், இரண்டு 50 மெகா பிக்சல் கொண்ட பின்புற கேமராக்களும், 32 மெகா பிக்ஸல் செல்ஃபி கேமராவும் இருப்பதோடு, 4700 மில்லி ஆம்ப் பேட்டரி இருப்பதால், தற்போதுள்ள உயர்ரக ஸ்மார்ட்போன்களுக்கு இணையாக நாள் முழுவதும் பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முந்தைய வெர்ஷனை விட பிரத்யேக அம்சங்கள் அதிகமாக இருந்தாலும், 15 ஆயிரம் ரூபாய் கூடுதலாக... அடிப்படை விலை 45 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதேசமயம், ஒரு லட்ச ரூபாய் கொடுத்து ஐபோன் வாங்குவதற்கு பதில், 45 ஆயிரம் ரூபாய்க்கே அதற்கு நிகரான அம்சங்களை கொண்டிருப்பதால், ஐபோனுக்கு போட்டியாக நத்திங் போன் 2 இருக்கலாம் என இணையவாசிகள் முனுமுனுக்க தொடங்கியுள்ளனர்.
மேலும், நத்திங் நிறுவனத்தின் உரிமையாளர் Carl Pei, தான் முன்பு Co-Founder ஆக இருந்த நிறுவனமான ஒன் ப்ளஸ்-க்கு சவால் விடும் வகையில், கலர் தீம்களை கஸ்டமைஸ் செய்வது உள்ளிட்ட பல புதிய அம்சங்களை களமிறக்கி விட்டிருப்பதாகவும் பேசப்படுகிறது.
இப்படி இளைஞர்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ள இந்த நத்திங் போன் 2, இன்னும் 2-3 மாதங்களில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.