வரப்போகிறது புதிய ரயில் பாதை.. சென்னை, ஈசிஆருக்கு குட்நியூஸ்.. பாண்டிசேரிக்கு ஈஸியான வழி வரப்போகிறது
சென்னையிலிருந்து மாமல்லபுரம் வழியாக கடலூர் வரையிலான ரயில் பாதை திட்டம் மீண்டும் கவனம் பெற்றிருப்பது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு...
மாமல்லபுரம் உலகபுகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்று... யுனெஸ்கோவால் அங்கீரிக்கப்பட்ட உலக பாரம்பரிய நினைவு சின்னங்களை கொண்ட மாமல்லபுரத்திற்கு ஏராளமான வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலா பயணிகள்வந்து செல்கின் றனர். இப்படி வரும் சுற்றுலா பயணிகளை குஷிபடுத்தும் வகையில் சென்னையிலிருந்து மாமல்லபுரத்திற்கு ரயில் பாதை திட்டம் அமைக்கப்படும் என 2007-ல் ரயில்வே அறிவித்தது.
சென்னை பெருங்குடி தொடங்கி மாமல்லபுரம் வழியாக புதுச்சேரி, கடலூருக்கு 179 கிலோ மீட்டர் தூரத்திற்கு, 523 கோடி ரூபாய் மதிப்பில் கடலோர ரெயில் பாதை திட்டத்தை அறிவித்தது.
திட்டத்தை செயல்படுத்த நிலம் கையப்படுத்துதல், அளவீடு செய்தல், மண் பரிசோதனை செய்தல் உள்ளிட்ட ஆய்வு பணிகளுக்காக தனியாக 2010 ஆம் ஆண்டில் 6.66 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியது. 2011 வரையில் வேகமாக நடைபெற்ற திட்ட பணிகள் கிடப்பில் போடப்பட்டது.
தொடர்ந்து கிடப்பில் போடப்பட்ட இந்த ரயில் பாதை திட்டத்தை விரைந்து செயல்படுத்த கிழக்கு கடற்கரை சாலை பகுதியை சேர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
மீண்டும் செயல்படுத்தினால் மாமல்லபுரம் சுற்றுலா பயணிகளின் சிரமம் குறையும், சென்னை-கடலூர் இடையிலான பயண நேரம் குறையும், வர்த்தகம் அதிகரிக்கும் எனவும் தெரிவித்தனர்.
இந்தநிலையில், திட்டத்தை விரைந்து செயல்படுத்த ரயில்வே முடிவு செய்திருக்கிறது. திட்டத்தில் சிறிய மாற்றமாக சென்னை பறக்கும் ரயில் நிலையம் உள்ள பெருங்குடி யிலிருந்து ரயில் பாதை அமைக்க ரயில்வே முடிவு செய்துள்ளது.
பெருங்குடியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையின் வலது பக்கமாகவே ரயில் பாதைய அமைக்கவும், செங்கல் பட்டிலிருந்து மாமல்லபுரத்திற்கு இணைப்பு ரயில்பாதை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
திட்டத்திற்கான சர்வே பணிகளை மேற்கொள்ள ரயில்வே நடவடிக்கை எடுத்து வருகிறது. 3 மாதங்களில் ஆய்வை முடித்து, வாரியத்திடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது. அதில் தேவையான இடங்கள், எங்கு ரயில் நிலையங்கள் அமையும் என தகவல் இடம்பெறும்.
பெரும் எதிர்பார்ப்பை கொண்ட கிழக்கு கடற்கரை சாலை ரயில் திட்டத்தை செயல்படுத்த ஆயிரத்து 599 கோடி ரூபாய் செலவாகும் என தெரிவிக்கப்படுகிறது. சர்வே அறிக்கைக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்த பிறகு, படிப்படியாக இத்திட்டம் செயல்படுத்த தெற்கு ரயில்வே முனைப்பு காட்டி வருகிறது.