கோடியில் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்றம்..திறப்பு விழாவின் சுவாரசியங்கள்
64 ஆயிரத்து 500 சதுர மீட்டர் பரப்பு... ஆயிரத்து 272 இருக்கைகள்... 970 கோடி ரூபாய் மதிப்பீடு.. மயில் வடிவில் மக்களவை... தாமரை மலர் வடிவில் மாநிலங்களவை... டெல்லியில் பார்த்துப் பார்த்துப் பிரமாண்டமாக கட்டப்பட்டு கம்பீரமாக காட்சியளிக்கும் புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் திறப்பு விழா, காந்தி சிலை அருகே சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது.திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக நாடாளுமன்ற வளாகத்திற்கு வந்த பிரதமர் மோடியை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வரவேற்றார். பின்னர் இருவரும் அங்குள்ள காந்தி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் நடைபெறும் இடத்திற்குச் சென்ற மோடிக்கு, பூரண கும்ப மரியாதையுடன் சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட தமிழ் மறைகள் முழங்க, வரலாற்று சிறப்பு மிக்க நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா தொடங்கியது.
அடுத்ததாக செங்கோல்... இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, ஆட்சி மாற்றத்தின் அடையாளமாகக் கருதப்பட்ட தமிழக செங்கோலை, சமீபத்தில் திருவாவடுதுறை ஆதீனம் உள்ளிட்ட ஆதீனங்கள் பிரதமர் மோடியிடம் வழங்கினர். தங்க முலாம் பூசப்பட்டு உச்சியில் நந்தியம்பெருமான் வீற்றிருக்க, நீதியின் அடையாளமாகப் பார்க்கப்படும் அந்த செங்கோலுக்கு நாடாளுமன்ற வளாகத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. கணபதி ஹோமம் நிகழ்த்தி, தேவாரம், திருவாசகம் ஒலிக்கப்பட, தரையில் விழுந்து வணங்கி தமிழக ஆதீனங்களிடம் இருந்து செங்கோலைப் பெற்றுக்கொண்டார் பிரதமர் மோடி.... அப்போது மலர்களைத் தூவி ஆசி அருளினர் ஆதீனங்கள்.... செங்கோல் ஏந்தியபடி கம்பீரமாக புதிய நாடாளுமன்ற வளாகத்துக்குள் கால்பதித்த பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் இருக்கை அருகே செங்கோலை நிறுவினார்.
அப்போது தேவாரம், திருவாசகம் பாடப்பட்டு, தமிழக பாரம்பரிய இசை வாத்தியங்கள் முழங்கப்பட்டன. அரசாள்வர் ஆணை நமதே என்ற கோளறு பதிகத்தின் வரிகளும், தென்னாடுடைய சிவனே போற்றி எனும் திருவாசக மந்திரமும் அப்போது பாடப்பட்டன. செங்கோலை நிறுவிய பிறகு, மலர் தூவி வணங்கிய பிரதமர் மோடி, பஞ்சமுக குத்துவிளக்கையும் நாடாளுமன்றத்தில் ஏற்றி வைத்து, ஆதீனங்களிடம் ஆசி பெற்றார். இதனையடுத்து, புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்கான கல்வெட்டை திறந்து வைத்த பிரதமர் மோடி, புன்னகை அரும்ப புதிய நாடாளுமன்ற வளாகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
பின்னர் புதிய நாடாளுமன்றத்தை எழுப்புவதற்காக அயராது உழைத்த தொழிலாளர்களுக்கு, சால்வை அணிவித்தும், நினைவுப் பரிசு வழங்கியும் பிரதமர் மோடி கவுரவித்தார். இதன்பிறகு, நாட்டு மக்களின் நலனுக்காக நாடாளுமன்ற வளாகத்தில் சர்வ மத பிரார்த்தனை நடத்தப்பட்டது. மக்களவை சபாநாயகர், மாநிலங்களவை துணைத் தலைவர், மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், தமிழகத்தைச் சேர்ந்த ஆதீனங்கள், பல்வேறு மத குருமார்கள் என ஏராளமானோர் கலந்துகொண்ட புதிய நாடாளுமன்றத்தின் திறப்பு விழா, நீண்ட நெடிய இந்திய சரித்திரத்தில் பசுமை மாறாமல் என்றென்றும் நிலைத்திருக்கும்.