கர்நாடகாவில் காணாமல் போன பாஜக MLA-வின் அண்ணன் மகன் சடலமாக மீட்பு
கர்நாடக பா.ஜ.க எம்.எல்.ஏவின் சகோதரனின் மகன் காரில் சடலமாக நதி கால்வாயில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கர்நாடக மாநிலம், ஹொன்னாலி பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினரும், முதல்வரின் முன்னாள் அரசியல் செயலாளருமான ரேணுகாச்சார்யாவின், அண்ணன் மகன் சந்துரு கடந்த 30-ம் தேதியிலிருந்து காணவில்லை. சிக்கமகளுருவில் உள்ள ஆசிரமத்திற்கு சென்று விட்டு சிமோகா வழியாக சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்த போது அவர் காணாமல் போனதாக கூறப்படுகிறது. அவரது செல்போன் சிக்னலை அடிப்படையாக வைத்து போலீசார் விசாரணை நடத்திய நிலையில்,
துங்கா கால்வாயில் வெள்ளை நிற எஸ்யூவி கார் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்த போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு இது கொலையா-விபத்தா என போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே பாஜக எம்எல்ஏவான ரேணுகாச்சாரியா, தம்மை அரசியல் ரீதியாக பழிவாங்க சிலர் தமக்கு உதவியாக இருந்த அண்ணன் மகனை கொலை செய்ததாக புகார் கூறியுள்ளார்.