நெல்லை எம்.பி. நீக்கம்..பள்ளி வாசலில் முற்றிய மோதல்.. அதிர்ச்சி காட்சிகள்
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஜான்ஸ் பள்ளி தாளாளராக இருந்த திருநெல்வேலி எம்.பி ஞானதிரவியம் நீக்கப்பட்ட நிலையில், அவரது ஆதரவாளர்களுக்கும், புதிய தாளாளர் ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது.பணி நியமன ஆணை தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையைத் தொடர்ந்து, திருநெல்வேலி எம்.பி. ஞானதிரவியத்தை, பாளையங்கோட்டை ஜான்ஸ் பள்ளி தாளாளர் மற்றும் திருமண்டல மேல்நிலைப்பள்ளி நிலைக் குழு உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி, நெல்லை திருமண்டல பிஷப் உத்தரவிட்டார். புதிய தாளாளராக அரசுத்துறை வழக்கறிஞர் அருள் மாணிக்கம் என்பவர் நியமிக்கப்பட்டார். ஞானதிரவியத்தை பதவி நீக்கம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது ஆதரவாளர்கள் பள்ளி முன்பாக திரண்டனர். அப்போது, புதிய தாளாளர் தரப்பினரும் கூடியதால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இருதரப்பினரையும் சமரசம் செய்தனர். போலீஸ் பாதுகாப்புடன் பள்ளியிலிருந்து எம்.பி வெளியேறினார். வகுப்புகள் முடிந்து மாணவர்கள் வெளியே வந்த நேரத்தில் நடந்த இந்தச் சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.