நள்ளிரவில் வெளியான நீட் ரிசல்ட் - எந்த மாநிலம் முதலிடம்?
நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், இந்திய அளவில் ராஜஸ்தானை சேர்ந்த தனிஷ்கா 715 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளார்.இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர 'நீட்' நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் கடந்த ஜூலை 17-ம் தேதி நடைபெற்றது. இதற்கான முடிவுகள் நள்ளிரவில் நேற்று வெளியான நிலையில், ராஜஸ்தானை சேர்ந்த தனிஷ்கா 715 மதிப்பெண்களுடன் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். 17.64 லட்சம் பேர் தேர்வை எழுதியதில் 9 லட்சத்து 93 ஆயிரத்து 69 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது ஒட்டுமொத்தமாக 56.30 சதவீதம் தேர்ச்சி அடைந்த நிலையில், கடந்த ஆண்டும் மாணவர்களின் தேர்ச்சி அதே அளவில் இருந்தது,தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதியவர்களில் 67 ஆயிரத்து 787 பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், மாணவர் திரிதேவ் விநாயகா 705 மதிப்பெண் பெற்று இந்திய அளவில் 30-வது இடமும், ஹரிணி 702 மதிப்பெண் பெற்று 43-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.தமிழகத்தை பொறுத்தவரை கடந்த ஆண்டினை விட தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. அதாவது, 2021ல் 57.4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், இந்த ஆண்டு 51.2 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இதே போல், கடந்த ஆண்டு பொதுப்பிரிவினர் 138 மதிப்பெண்கள் எடுத்தால் தேர்ச்சி என்ற நிலை இருந்தது. அது,117 ஆக குறைந்துள்ளது. எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 108 மதிப்பெண்ணிலிருந்து 93 ஆக குறைந்துள்ளது.இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதியவர்களில் உத்தரபிரதேசம் மற்றும் மகராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் தேர்ச்சி அடைந்து இருப்பதாக தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.