'கேட்ட நகை எங்கே..?' திருமணமான இளம் பெண் உயிரிழப்பில் மர்மம்.. கதறிய தந்தை போலீசில் புகார்..
தூத்துக்குடியில் திருமணமான இளம் பெண் ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், வரதட்சணை கொடுமையால் தான் பெண் கொலை செய்யப்பட்டார் என உறவினர்கள் போலீசில் புகாரளித்துள்ளனர்
தூத்துக்குடி தெற்கு எம்பரர் பகுதியை சேர்ந்தவர் அனிஷா. இவருக்கும் லயன் டவுன் பகுதியை சேர்ந்த பிரசாத் என்பவருக்கும் கடந்தாண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.
இதில், பிரசாத் குவைத்தில் பணி புரிந்து வரும் நிலையில், மாமனார் மற்றும் மாமியாருடன் அனிஷா வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக சொந்த ஊருக்கு வந்த பிரசாத், தன் மாமனாருக்கு போன் செய்து அனிஷா உடல் நலக்குறைவால் இறந்து விட்டதாக கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, மகளை இழந்த கில்பர்ட் போலீசில் புகாரளித்தார்.
அதில், திருமணத்தின் போது கேட்ட நகையினை இன்னும் வழங்காததை சுட்டிக்காட்டி தன் மகளை சித்ரவதை செய்து வந்ததாகவும், அவர் வரதட்சணை கொடுமையால் தான் உயிரிழந்தார் எனவும் கூறி போலீசில் புகாரளித்தார்.
இதையடுத்து, சம்பவத்தை சந்தேக மரணம் என வழக்குபதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.