நாளை தொடங்கும் மழைக்கால கூட்டத்தொடர்.. எதிர்க்கட்சிகள் போட்ட பிளான்
மழைக்கால கூட்டத்தொடர் தொடர்பாக பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது...
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கும் விதமாக அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி, இன்று நடைபெறும் கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள் பலரும் பங்கேற்பார்கள் என்றும், பிரதமர் மோடி பங்கேற்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் மழைக்காலக் கூட்டத் தொடரை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்த அரசு தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே விலைவாசி உயர்வு, மத்திய விசாரணை அமைப்புகளின் சோதனை, மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக குரல் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த கூட்டத்தொடரில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என தெரிகிறது.