தமிழ் மொழி குறித்து மோடியின் கருத்து
அரசு முறை பயணமாக ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று தாயகம் திரும்பிய பிரதமர் மோடிக்கு, டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது மக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், இந்தியா என்ன நினைக்கிறது என்பதை அறிய உலக நாடுகள் ஆவலாக இருப்பதாகவும், எதிரிகளுக்கும் உதவும் இந்தியாவின் மனப்பான்மையைக் கண்டு உலக நாடுகள் வியப்பதாகவும் தெரிவித்தார். இதனிடையே, பப்புவா நியூ கினியா நாட்டில் திருக்குறளின் மொழிப்பெயர்ப்பு நூலை வெளியிட்டது குறித்து நினைவுக்கூர்ந்த அவர், தமிழ் மொழி ஒவ்வொரு இந்தியர்களின் மொழி எனவும், உலகின் மிகப் பழமையான மொழி எனவும் பெருமிதம் தெரிவித்தார். மேலும் நமது கலாச்சாரம் மற்றும் மகத்தான பாரம்பரியம் குறித்து தைரியமாக பேசுங்கள் என அறிவுறுத்திய அவர், அதை கேட்க உலகம் ஆவலாக இருப்பதாகவும், நமது புனித தலங்கள் மீதான தாக்குதலை ஏற்க முடியாது என்ற வாதத்தை உலக நாடுகள் ஏற்பதாகவும் கூறினார்.