அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு - "அமலாக்கத்துறை விசாரிப்பது எப்போது?" - இன்று பிற்பகல் 2.15-க்கு காத்திருக்கும் ட்விஸ்ட்
அமைச்சர் செந்தில் பாலாஜியை எப்போது முதல் அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிக்க அனுமதிப்பது என்பது குறித்து முடிவெடுப்பதற்காக, நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வு, இன்று விசாரணை நடத்த உள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு, மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. மூன்றாவது நீதிபதி
சி.வி.கார்த்திகேயன், நீதிபதி பரத சக்கரவர்த்தியின் தீர்ப்பை உறுதி செய்த நிலையில் இரு நீதிபதிகள் அமர்வில் வழக்கை விசாரணைக்கு பட்டியலிட தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தார். இந்நிலையில், இந்த பரிந்துரையை ஏற்ற தலைமை நீதிபதி, இன்று பிற்பகல் 2:15 மணிக்கு நீதிபதிகள் நிஷாபானு மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் வழக்கை விசாரிக்க பட்டியலிட்டுள்ளார். இன்றைய விசாரணையில் செந்தில் பாலாஜியை எப்போது முதல், அமலாக்கத் துறை காவலில் வைக்க அனுமதிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.