டாஸ்மாக்கில் புகுந்து 5 லட்சம் திருடிய முகமூடி கொள்ளையர்கள்.. ஊழியருக்கு விழுந்த அரிவாள் வெட்டு
விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில், டாஸ்மாக் ஊழியர்களை, முகமூடி கொள்ளையர்கள் அரிவாளால் தாக்கி, 5 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சுழி குண்டாறு பள்ளிமடம் அருகே அடர்ந்த காட்டுப் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. பண்டிகையையொட்டி கடந்த இரு தினங்களாக மதுப்பிரியர்கள் கூட்டம் அலைமோதியது. இதனை கண்காணித்த மர்மக்கும்பல், கடை மூடப்படும் வரை காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்தது. விற்பனையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் கடையை மூட இருந்த நேரத்தில் திடீரென வீச்சரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கடைக்குள் அந்தக் கும்பல் நுழைந்தது. தடுக்கச் சென்ற விற்பனையாளர் பூமிநாதனுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் நிலை தடுமாறி அவர் கீழே விழுந்த நிலையில், மீதமுள்ள மூன்று ஊழியர்களையும் பீர்பாட்டிலால் அக்கும்பல் தாக்கியது. இதையடுத்து 5 லட்சத்து 37 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்துவிட்டு மர்ம நபர்கள் தப்பிச்சென்றனர். படுகாயமடைந்த ஊழியர்கள், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசகப்பெருமாள் ஆய்வு செய்தார். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.