பல பெயர்கள்... பல திருமணங்கள்... இன்ஸ்டா ரசீதாவால் மோசம் போன இளைஞர்
இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி பல இளைஞர்களை திருமணம் செய்து மோசடி செய்ததாக இளம்பெண் மீது பாதிக்கப்பட்ட இளைஞர் சேலம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் தேவாலா பகுதியை சேர்ந்தவர் இளம்பெண் ரசிதா. இவர், இன்ஸ்டாகிராமில் பல்வேறு பெயர்களில் போலிக் கணக்குகளை தொடங்கி, ஆண்கள் பலரை ஏமாற்றி திருமணம் செய்து, பணம் மற்றும் நகையை பறித்துச் சென்றது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த மூர்த்தி என்ற இளைஞர், இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், இன்ஸ்டாகிராம் மூலம் மூர்த்திக்கும், ரசீதாவிற்கும் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் அது காதலாக மாறியுள்ளது. அதனைத் தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் இருவரும் திருமணம் செய்த நிலையில், மூர்த்தியுடன் ரசீதா தகராறில் ஈடுபட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து வீட்டில் இருந்த ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் மற்றும் 5 சவரன் தங்க நகை மாயமனதைக் கண்டு மூர்த்தி அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும், சமூகவலைதளங்களில் ரசீதா குறித்து தேடியபோது, பொய்யான பெயர்களில் பல்வேறு ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டது தெரியவந்ததாக மூர்த்தி போலீசாரிடம் தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.