மணிப்பூர் வன்முறை விவகாரம் - மத்திய அரசு புதிய அறிவிப்பு
மணிப்பூரில் நடந்த வன்முறை குறித்து விசாரிக்க, உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையத்தை மத்திய அரசு அமைத்துள்ளது.
வன்முறை நடந்த மணிப்பூர் மாநிலத்தில், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆய்வு செய்த பின்னர், இந்த விசாரணை ஆணையத்தை நியமிப்பதாக அறிவித்துள்ளார். அதன்படி, கவுகாத்தி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி அஜய் லம்பா தலைமை ஏற்பார். ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஹிமான்ஷு சேகர் தாஸ், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி அலோகா பிரபாகர் ஆகியோர் ஆணையத்தின் உறுப்பினர்களாக இருப்பார்கள். இந்த ஆணையம், மணிப்பூர் மாநிலத்தில் மே மாதம் 3ஆம் தேதியும், அதற்கு பின்னர் நடந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்தும் விசாரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்முறை, அது பரவியதற்கான காரணங்கள், பொறுப்பான அதிகாரிகள் தரப்பில் குறைபாடுகள் உள்ளதா என விசாரிக்கும். ஆணையத்தின் தலைமையகம் இம்பாலில் செயல்படும் என்றும், 6 மாத காலத்திற்கு விசாரித்து அறிக்கையை மத்திய அரசுக்கு சமர்பிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.