மணிப்பூர் விவகாரம்..! மாறி மாறி போராட்டம்..! நாடாளுமன்றத்தில் பரபரப்பு

x

இந்திய கூட்டணி கட்சி உறுப்பினர்களும், பாஜக உறுப்பினர்களும் நாடாளுமன்ற வளாகத்தில் போட்டிக்குப் போட்டியாக ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். 2 நாள் விடுமுறைக்கு பின்னர் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று மீண்டும் கூடியுள்ள நிலையில் மணிப்பூர் விவகாரத்தை முன்வைத்து இந்திய கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிரஞ்சன் சவுத்ரி, திமுக மக்களவை குழு தலைவர் டி ஆர் பாலு மற்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சியை சார்ந்த பல்வேறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

பிரதமர் மோடி அவைக்கு வர வேண்டும் எனவும், நாடாளு மன்றத்தில் விளக்கம் அளித்து மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்றும் கண்டன பதாகைகளுடன் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதற்கு போட்டியாக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களும், அதே காந்தி சிலை பகுதியில் மேற்குவங்க மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.


Next Story

மேலும் செய்திகள்