எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு `இந்தியா'..பாஜக கூட்டணிக்கு சவால் விட்ட மம்தா - பிரதமர் மோடியை கிண்டல் செய்த கார்கே!

x

எதிர்க்கட்சிகள் கூட்டத்தைப் பார்த்து, பாஜக பயந்துவிட்டதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியிருக்கிறார். பெங்களூருவில் பரபரப்பாக நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் நடந்தது என்ன...? என்பதை விவரிக்கிறது இந்த தொகுப்பு...

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் பாஜகவை தோற்கடிக்கும் நோக்கில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. பாட்னா கூட்டத்தை தொடர்ந்து பெங்களூருவில் நடந்த கூட்டத்தில் சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, நிதிஷ் குமார், அகிலேஷ் யாதவ், ஸ்டாலின், அரவிந்த் கெஜ்ரிவால் என 50-க்கும் மேற்பட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் 26 கட்சிகளின் தலைவர்கள் கலந்து க்கொண்டனர். கூட்டத்தில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியின் பெயரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்பதை மாற்றும் முடிவு எடுக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு இந்தியா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. I - Indian, N - National, D - Development, I - Inclusive, A - Alliance அதாவது கூட்டணியின் பொருள் இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் குறித்து தலைவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.

காங்கிரஸ் அதிகாரத்திற்கு ஆசைப்படவில்லை எனக் குறிப்பிட்ட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் விருப்பம் எல்லாம் அரசியல் சாசனம், ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூக நீதியை காப்பது மட்டுமே என்றார். கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் பாஜக கூட்டத்தில் 30 கட்சிகள் பங்கேற்பு என்பதை கேலி செய்து, அந்த கட்சிகளை எல்லாம் தான் கேள்விப்பட்டதே இல்லை என்றார்.

பிராந்திய கட்சிகள் பிளவு குறித்து பேசிய கார்கே, மக்களின் நட்சத்திரமான தலைவர்கள் தங்களுடன் இருப்பதாக தெரிவித்தார்...

மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் தலைவர்

மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் பேசிய போது, பாஜக கூட்டணிக்கு, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியை எதிர்க்க தைரியம் இருக்கிறதா? என கேள்வியை எழுப்பினார்.

கெஜ்ரிவால் பேசிய போது, மக்களின் கண்ணீரை துடைக்க பாஜகவை ஆட்சிக்கட்டிலில் இருந்து அகற்ற வேண்டும் என்றார்.... காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசியபோது, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக இந்தியா போராட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது, இதை சுட்டிக்காட்டும் விதமாகவே 'இந்தியா' என பெயர் சூட்டப்பட்டதாக தெரிவித்தார்

எதிர்க்கட்சிகள் கூட்டணியில் 11 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது எனக் கூறிய கார்கே, மும்பை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே கூட்டத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 2024 ஆம் ஆண்டு புதிய இந்தியாவை உருவாக்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளோம் என்றார்


Next Story

மேலும் செய்திகள்