மாமன்னன் ஃபிளாஷ்பேக் நிஜ சம்பவம்.. நிஜத்தில் சிறுவர்கள் கொல்லப்பட்ட இடம் இதுதான்..!

x

சமீபத்தில் வெளியான மாமன்னன் படத்தின் திரைக்கதை, 43 ஆண்டுகளுக்கு முன் பெரம்பலூரில் நடந்த படுகொலைகளை தழுவி எடுக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் குறித்து அலசுகிறது இந்த தொகுப்பு


இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த மாமன்னன் படத்தின் காட்சிகள், சுமார் 43 வருடங்களுக்கு முன் கொளப்பாடி கிராமத்தில் நடந்த சாதிய படுகொலையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாக அங்குள்ள கிராம மக்கள் கூறுகின்றனர். கொளப்பாடி கிராமத்தில் நடந்தது தான் என்ன?...

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டத்தில் அமைந்துள்ளது "கொளப்பாடி' எனும் குக்கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த சிவசாமி என்பவர், அதே கிராமத்திற்கு கணக்குப்பிள்ளையாக இருந்திருக்கிறார்.

இந்நிலையில் 1980ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலன்று பரபரப்பாக வாக்குப்பதிவு நடந்து கொண்டிருந்த நேரத்தில், கிராம மக்கள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்கச் சென்றிருந்தனர். அப்போது பட்டியலினத்தை சேர்ந்த நான்கு சிறுவர்கள், சிவசாமிக்கு சொந்தமான கிணற்றில் இறங்கி குளித்திருக்கின்றனர்.

இந்த தகவலை கேள்விப்பட்டு ஆத்திரம் அடைந்த சிவசாமி, சாதி வெறி பிடித்த மிருகமாக மாறி, கிணற்றில் மின்சாரத்தை பாய்ச்சி அந்த நான்கு சிறுவர்களையும் ஈவு இரக்கமின்றி கொடூரமாக கொலை செய்ததாக கூறப்படுகிறது.

மறுபுறம், போதிய விவரம் அறியாத வெள்ளந்தி மனிதர் களான அந்த சிறுவர்களின் பெற்றோர், இச்சம்பவம் குறித்து அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் இறந்து போன தங்கள் பிள்ளைகளை அந்த ஊரிலேயே எரித்து காரியம் செய்திருக்கிறார்கள்.

அதற்கு பின் சிவச்சாமி செய்த செயல் தான், மேலும் கொடூரமானது. அவர் நேராக காவல் நிலையத்திற்கு சென்றதுடன், "அரசு அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல், இறந்து போன நான்கு சிறுவர்களையும் அவர்களது பெற்றோர்கள் எரித்து விட்டார்கள்" என்று புகார் அளித்துள்ளார்.

இதனால், சிறுவர்களின் பெற்றோர்களை ஆறு மாத காலம் சிறையிலும் அடைத்து இருக்கிறார்கள், என்று தாங்கள் நேரில் பார்த்த சம்பவத்தை வேதனையோடு விவரிக்கின்றனர் கொளப்பாடி கிராம மக்கள்.

மாமன்னன் திரைப்படத்தில் வரும் பிளாஷ்பேக் காட்சியில், பட்டியலின சிறுவர்கள் கோயில் கிணற்றில் குளித்ததால், அவர்களை சிலர் கல்லெறிந்து கொல்வது போல் காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.

கொளப்பாடி மக்கள் கூறும் தகவலை வைத்து பார்த்தால், அங்கு நடந்த சம்பவங்களை மையப்படுத்தி தான் மாரி செல்வராஜ் இந்த காட்சியை வடிவமைத்தாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்