10 km மாரத்தான் ஓடிய மதுரை இளைஞன்.. எல்லையை தொட்டதும் பறிபோன உயிர் - 1 நொடியில் சிதைந்த கனவு.. கட்டிப்பிடித்து கதறிய நண்பர்கள்

x

மதுரையில், ரத்ததான விழிப்புணர்வு மாரத்தானில் பங்கேற்ற கல்லூரி மாணவன், மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை ராஜாஜி மருத்துவமனை மற்றும் மாவட்ட மக்கள் நல்வாழ்த்துறை சார்பில் ரத்ததான விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்த இந்த மாரத்தான் போட்டியில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இந்த மாரத்தான் போட்டியானது மதுரை மருத்துவக் கல்லூரியில் தொடங்கி 10 கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபெற்றது.

மதுரையில் உள்ள பொறியியல் கல்லூரியில் 4ஆம் ஆண்டு பயின்று வந்த 20 வயதான தினேஷ் என்ற மாணவரும் மாரத்தானில் ஆர்வமுடன் பங்கேற்று ஓடியுள்ளார்.

10 கிலோ மீட்டர் தூரம் வரை நடைபெற்ற மாரத்தான் போட்டியில் வெற்றிகரமாக ஓடிய தினேஷ், மேடையின் அருகேயுள்ள கழிவறைக்கு சென்றபோது திடீரென நிலைகுலைந்து மயங்கி விழுந்துள்ளார்.

அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள், ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது தினேஷிற்கு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் தோல்வியிலேயே முடிந்தது.

சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்த தினேஷின் உடலை, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டபோது, அவரது நண்பர்கள் கதறி அழுதது காண்போரை வேதனையில் ஆழ்த்தியது.

மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட மாணவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தது, தினேஷின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே மாணவன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் ரத்னவேல் விளக்கம் அளித்துள்ளார். அதில், மாணவர் தினேஷ் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட பின்பு, போட்டி முடிவடைந்து அவரது நண்பர்களிடம் சகஜமாக பேசிக் கொண்டுதான் இருந்துள்ளார்.

கழிவறைக்கு சென்றபோது திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சக நண்பர்கள் ஆம்புலன்ஸ் மூலமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றபோது, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், ரத்த அழுத்தமும், இதயத்துடிப்பும் இல்லாமல் போனதால், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு தினேஷ் உயிரிழந்ததாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.

துடிதுடிப்பான இளைஞனின் உயிர் ஒரு விநாடிக்குள் மாரடைப்பால் மடிந்துபோன சம்பவம் மனதை உலுக்கியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்