மூதாட்டிகளை மட்டும் குறிவைத்து ஸ்கெட்ச்..முகவரி கேட்பது போல் நடித்து...செயின் பறிப்பு....
மதுரையில், தனியாக செல்லும் மூதாட்டிகளை குறி வைத்து, முகவரி கேட்பது போல் செயின்பறிப்பில் ஈடுபட்டு வந்த 2 பெண்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்
மதுரை புறநகர் பகுதிகளில் சாலையில் தனியாக செல்லும் மூதாட்டிகளிடம், முகவரி கேட்பதுபோல் நடித்து, கழுத்தில் அணிந்திருக்கும் தங்க செயினை பறித்து விட்டு, இருசக்கர வாகனத்தில் கொள்ளையர்கள் தப்பிச் செல்வதாக போலீசாருக்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்தன. அதனைத் தொடர்ந்து, களத்தில் இறங்கிய விக்கிரமங்கலம் போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது, செயின்பறிப்பில் ஈடுபட்ட நபர்கள் புல்லட் வாகனத்தில் தப்பியது தெரியவந்தது. அந்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தியபோது, திண்டுக்கல் பகுதியை சேர்ந்த தர்மர், அவரது கூட்டாளியான பிரவீனா மற்றும் சரோஜா என்ற பெண்கள் உதவியோடு, வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது உறுதியானது. உடனடியாக இரு பெண்கள் உட்பட மூவரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 6 சவரன் தங்க நகை மற்றும் புல்லட் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
Next Story