முதற்கட்ட தேர்தலில் குறைந்த வாக்குப்பதிவு.. 2ம் கட்ட தேர்தல் - என்ன செய்வார்கள் குஜராத்திகள்?

x

குஜராத்தில் கடந்த 1 ஆம் தேதி சவுராஷ்டிரா, கட்ச் மற்றும் தெற்கு குஜராத் பகுதிகளை உள்ளடங்கிய 89 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதில் கடந்த ஆண்டை விட குறைவாகவே வாக்கு பதிவாகியிருந்தது. குறிப்பாக 63.31 சதவீத வாக்குகளே பதிவாகியிருந்தது. அதுவும் நகர்புறங்களில் பதிவான வாக்குகள் பெரும் சரிவை சந்தித்திருந்தன.

இந்நிலையில், ஆமதாபாத், வதோதரா, காந்திநகர் பகுதிகளை உள்ளடக்கிய வடக்கு மற்றும் மத்திய குஜராத் பகுதிகளை உள்ளடக்கிய 93 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

சுமார் இரண்டு கோடியே 51 லட்சம் வாக்காளர்கள்... 833 வேட்பாளர்களின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க உள்ளனர்.

இதில் குஜராத் முதல்வர் வேட்பாளராக பாஜக சார்பில் களமிறங்கும் முதலமைச்சர் பூபேந்திர படேல், காட்லோடியா தொகுதியிலும்,

காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் ஐக்கியமாகிய இளம் தலைவர் ஹர்திக் படேல் விராம்காம் தொகுதியிலும்,

மற்றொரு மூத்த தலைவர் அல்பேஷ் தாக்கூர், காந்தி நகர் தெற்கு தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஜிக்னேஷ் மேவானி வட்காம் தொகுதியில் களம் காணுகிறார்.

குறிப்பாக தனது சொந்த மாநிலத்தில், பிரதமர் ஒருவர் 31 பொதுக்கூட்டங்களில் உரையாற்றி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டது... பலரையும் ஆச்சரியப்படவைத்தது.

இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது...2002ல் பிரதமர் மோடி குஜராத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்ற போது 127 இடங்களை கைப்பற்றிய பாஜக... அதற்கு பிறகு சந்தித்த அடுத்தடுத்த தேர்தல்களில் பெரும் சரிவை சந்தித்தது.

இந்த சரிவை சரி செய்ய வேண்டிய கட்டாயம் ஒருபுறம்... இன்னொரு புறம்.. காங்கிரஸில் இருந்து பாஜகவிற்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு சீட் ஒதுக்கப்பட்டதால்... அதிருப்தி பாஜகவினர்... சொந்த கட்சிக்கு எதிராகவே பல தொகுதிகளில் களமிறங்கியிருப்பதும் ஒரு காரணம்.

கிட்டத்தட்ட 27 ஆண்டுகளாக குஜராத் மாடலை கையில் எடுத்து, ஆட்சி புரிந்து வரும் பாஜக... இம்முறை மீண்டும் ஆட்சியை தக்க வைக்குமா? என்பதை டிசம்பர் 8 ஆம் தேதி வெளியாக இருக்கும் தேர்தல் முடிவில் தான் தெரியவரும்.


Next Story

மேலும் செய்திகள்