சாலையில் எமனாக நின்றிருந்த லாரி..சம்பவ இடத்திலே ஆசிரியரும் பள்ளி மாணவனும் பலி
ராமநாதபுரம் அருகே, நின்றுக் கொண்டிருந்த லாரியின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், யோகா மாஸ்டர் மற்றும் பள்ளி மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேவிபட்டினம் பகுதியைச் சேர்ந்த ஹரிகரன், பள்ளி மாணவர்களுக்கு யோகா பயிற்றுவித்து வந்தார். இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக, 7ம் வகுப்பு மாணவன் வெற்றிவேல் என்பவரை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு, கீழக்கரை நோக்கி சென்றுக் கொண்டிருந்தார். அப்போது பெருவயல் என்ற பகுதியில் நின்றிருந்த லாரியின் மீது, இவர்கள் சென்ற இருசக்கர வாகனம் மோதி விபத்திற்குள்ளானது. இதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த இருவரும், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியான நிலையில், உடல்களை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, சாலை விபத்தில் யோகா ஆசிரியரும், பள்ளி மாணவனும் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.