கூடுதல் விலைக்கு மது விற்பனை... 10 மாதங்களில் கோடிக்கணக்கில் அபராதம் - வியந்து போன விற்பனையாளர்கள்
தமிழகத்தின் பல இடங்களில் கூடுதல் விலைக்கு மதுபாட்டில்களை விற்ற டாஸ்மாக் கடைகளின் விற்பனையாளர்களிடம் இருந்து 5 கோடியே 49 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்பவர்கள் மீதான நடவடிக்கை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பப்பட்டது.இதற்கு அளிக்கப்பட்ட பதில், சென்னை, ஈரோடு, கரூர் உள்ளிட்ட 29 மாவட்டங்களில் 4 ஆயிரத்து 658 விற்பனையாளர்கள் அதிக விலைக்கு விற்றதாக கூறப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து 5 கோடியே 49 லட்சத்து 64 ஆயிரத்து 400 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரை அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 397 விற்பனையாளர்களிடமிருந்து ரூ. 46 லட்சத்து 84 ஆயிரத்து 600 வசூலிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மதுபாட்டில்கள் 5 ரூபாய் கூடுதலாக வைத்து விற்பனை செய்தால் 5 ஆயிரத்து 900 ரூபாயும், 7 ரூபாய் கூடுதலாக வைத்து விற்பனை செய்தால் 8 ஆயிரத்து 260 ரூபாயும், 10 ரூபாய் கூடுதலாக வைத்து விற்பனை செய்தால் 11 ஆயிரத்து 800 ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. பெரம்பலூர், அரியலூர், மதுரை தெற்கு உள்ளிட்ட 9 மாவட்டங்கள் முறையாக பதிலளிக்கவில்லை எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.