மதுபான கொள்கை முறைகேடு - குற்றப்பத்திரிக்கையில் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா பெயர் இல்லை
டெல்லியில் மதுபானக் கொள்கை முறைகேடு புகார் தொடர்பாக, சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையில், துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவின் பெயர் இடம்பெறவில்லை. டெல்லி அரசு நடைமுறைப்படுத்திய புதிய மதுபான கொள்கையில், முறைகேடு நடந்ததாக, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. மேலும், டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை நேரில் அழைத்து விசாரணை நடத்தியதுடன், அவரது வீடு அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடத்தியது. இந்நிலையில், முறைகேடு புகார் தொடர்பாக, குற்றப்பத்திரிக்கையை சிபிஐ தாக்கல் செய்துள்ளது. அதில், மணிஷ் சிசோடியா பெயர் இடம்பெறவில்லை. அதே நேரத்தில், அவருக்கு நெருக்கமானவராக கருதப்படும் விஜய் நாயர், கலால்துறையின் துணை மற்றும் இணை ஆணையர்கள் உட்பட 7 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இது முதல் குற்றப்பத்திரிக்கை என்றும், துணை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.